பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதல்வி திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்ததாக கூறப்படுவது மீது பிரதமருக்கு எதிராக அரசு சாரா அமைப்பான ஜிங்கா 13 இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) புகார் செய்துள்ளது.
நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மான்சோரையும் பெயர் குறிப்பிட்டுள்ள அந்தப் புகாரில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 17ம் தேதி நடத்தப்பட்ட அந்த விருந்துக்கு 409,767 ரிங்கிட் பொது நிதி செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஷா அலாமில் உள்ள சிலாங்கூர் எம்ஏசிசி தலைமையகத்தில் இன்று பிற்பகல் அந்தப் புகார் கொடுக்கப்பட்டதாக ஜிங்கா 13ன் தலைவர் பேரிஷ் மூசா, தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
“நாங்கள் தேவையான எல்லா ஆவணங்களையும் குறிப்பாக Banquet Event Order (BEO) என்னும் அளிப்பாணையை வழங்கியுள்ளோம். அந்த அளிப்பாணை பிரதமர் அலுவலகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.”
“அந்த ஆவணங்களை எம்ஏசிசி புலனாய்வு செய்து அவசியமானால் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்காக 2009ம் ஆண்டுக்கான எம்ஏசிசி சட்டத்தின் 23வது பிரிவின் கீழ் நஜிப் மீது குற்றம் சாட்டும் என நாங்கள் நம்புகிறோம்,” என்றார் பேரிஷ்.
தனிப்பட்ட சடங்கு ஒன்றுக்கு 409,767 ரிங்கிட் மக்கள் வரிப்பணம் எப்படி செலவு செய்யப்பட முடியும் என அவர் வினவினார்.
“36 மிக முக்கிய பிரமுகர்களுக்குத் தலா 522 ரிங்கிட் பெறும் விருந்துக்கு 18,792 ரிங்கிட்டும் மற்ற 862 பேருக்கு மொத்தம் 309,975 ரிங்கிட்டும் செலவு செய்யப்பட்டுள்ளன. நடைமுறைச் செலவுகள் 81,000 ரிங்கிட் ஆகும்,” என அவர் சொன்னார்.
அந்த விருந்துக்கான ஆர்டரை பிரதமர் அலுவலகம் வழங்கியுள்ளதை அந்த ஆவணம் காட்டுகிறது. அந்தத் தகவலை முதலில் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்டார்.
என்றாலும் ஷாங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற அந்த விருந்துக்கான செலவுகளுக்கு பொது நிதிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
அந்த விருந்துக்கான செலவுகளுக்கு தமது சொந்தப் பணத்திலிருந்து பணம் கொடுத்ததை பிரதமர் நிரூபிக்க வேண்டும் என ராபிஸி கேட்டுக் கொண்டுள்ளார்.