லினாஸ் காரணமாக ஒய்வுத் தல மேம்பாட்டுத் திட்டம் ரத்துச் செய்யப்படலாம்

லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் குவாந்தானுக்கு அருகில் ஒய்வுத் தலம் ஒன்றையும் வீடமைப்புத் திட்டம் ஒன்றையும் மேற்கொள்ளும் திட்டத்தை நிறுத்திக் கொள்வது பற்றி அதன் மேம்பாட்டாளர் பரிசீலித்து வருகிறார்.

அந்தத் தொழில் கூடத்தை அமைக்கும் முடிவை அரசாங்கம் தொடர்ந்து நிலை நிறுத்துமானால் குவாந்தான் கோல்டு கோஸ்ட் திட்டத்தை STG குழும இயக்குநர் அலெக்ஸ் தான் சியோங் செங் கூறினார்.

சாத்தியமான இழப்புக்களைத் தவிர்ப்பதும் STG குழும முதலீட்டாளர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதும் அதன் நோக்கம் என்று அவர் சொன்னதாக நன்யாங் சியாங் பாவ் என்ற சீன மொழி நாளேடு கூறியது.

அந்தத் திட்டம் மீது STG குழுமம் மூன்று மில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்துள்ளது. அரிய மண் தொழில் கூடம் நடவடிக்கைகளைத் தொடங்கினால் 20 மில்லியன் ரிங்கிட் முதல் 30 மில்லியன் ரிங்கிட் வரையிலான இழப்பை அது எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றார் லீ.

இதனிடையே அந்தத் தொழில் கூடம் இயங்கத் தொடங்கினால் குவாந்தான் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பாகாங் பிகேஆர் மத்தியக் குழு உறுப்பினர் லீ சியான் சுங் கூறியிருக்கிறார்.

“குவாந்தான் சுற்றுலா நகரம். அரிய மண் தொழில் கூடம் நடவடிக்கைகளைத் தொடங்கினால் தொடர் விளைவுகள் ஏற்படும். அதனால் மீன் அல்லது மற்ற கடல் உணவு வகைகள், தோட்டங்கள், சொத்துக்கள் அல்லது சுற்றுப்பயணம் மீது கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்றார் லீ.

லினாஸ் தொழில் கூடம் நிர்மாணிக்கப்படும் கெபெங்கிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்கை பாலாக்-கில் பல மில்லியன் ரிங்கிட் செலவில் உருவாகும் குவாந்தான் கோல்ட் கோஸ்ட் திட்டம்  500 முதல் 600 வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அவர் சொன்னார். அதனால் உள்ளூர் மக்கள் நன்மை அடைவார்கள்.

“அதே வேளையில் லினாஸ் இது நாள் வரை 200 வேலை வாய்ப்புக்களை மட்டுமே உருவாக்கியுள்ளது.  அதற்கு 12 ஆண்டுகள் வரி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கெபெங் தொழில் பேட்டையில் தொழில் கூடத்துக்காக அது வாங்கியுள்ள நிலத்துக்கு முத்திரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.”

“அத்துடன் மலேசியத் தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக லினாஸுக்கு 1.2 மில்லியன் ரிங்கிட் மானியமும் கொடுக்கப்பட்டுள்ளது,” என்றும் லீ தெரிவித்தார்.