“நீதிபதிக்கு எதிரான அவதூறு நீதிமன்றத்தை அவமதித்தாக கருதப்படும்”

நீதித் துறை மீது அவதூறு கூறும் எந்த அறிக்கையும் கட்டுரையும் கருத்தும் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதப்பட  முடியும்.

இவ்வாறு கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள நிறுவனத் தொடர்பு, அனைத்துலக உறவுகள் பிரிவின் தலைவர் முகமட் அய்சுடின் ஸொல்கெப்லி கூறியிருக்கிறார்.

அத்தகைய அறிக்கைகளை, கருத்துக்களை அல்லது கட்டுரைகளை வெளியிடுவதற்கு பொறுப்பான யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என்றார் அவர்.

“நீதிபதி ஒருவருடைய நடத்தை தவறானதாக இருந்தால் அது குறித்து புகார் செய்வதற்கு சட்டத்தில் முறையான வழிகள் உள்ளன. பொது மக்களைக் குழப்பக் கூடிய அம்சங்களைக் கொண்ட அவதூறான அம்சங்களைக் கொண்ட அறிக்கைகளை, கருத்துக்களை அல்லது கட்டுரைகளை வெளியிடுவது தவறாகும்,” என அவர் நேற்று விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

முறையீட்டு நீதிமன்றம் நீதிபதி ஆனந்தம் காசிநாதர் மீது அவதூறு கூறியுள்ளதாக கூறப்படும் வலைப்பதிவாளருக்கு எதிராக மார்ச் மாதம் எட்டாம் தேதி புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தில் முறையிட்டு நீதிமன்ற துணைப் பதிவாளர் ரிஹாய்டா ராபியி புகார் செய்துள்ளது பற்றி முகமட் அய்சுடின் கருத்துரைத்தார்.

பல வலைப்பதிவுகள் “அவதூறான” வாசகங்களைப் பதிவு செய்துள்ளன

புகழ் பெற்ற வலைப்பதிவாளர் பாப்பாகோமோ உட்பட பலரது வலைப்பதிவுகளில் அந்த அவதூறான கருத்துக்கள் எனக் கூறப்படும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

Magic Telekom Sdn Bhd-ம் Numix Engineering Sdn Bhd-ம் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்கில் மற்ற நீதிபதிகள் தலையிட்டதாக சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர் குறிப்பிட்டிருந்தார்.

“நீதித் துறையின் தோற்றத்தைக் குறிப்பாக நீதிபதிகளுடைய கௌரவத்துக்கும் தோற்றத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட எழுத்துக்களையும் ஆதாரமற்ற கருத்துக்களையும் மலேசிய நீதித் துறை கடுமையாகக் கருதுகிறது,” என்றார் அவர்.

நீதியை நிலை நிறுத்தும் அமைப்பு என்ற முறையில் எல்லாத் தரப்புக்களுக்கும் நீதித் துறையை மதிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதாக முகமட் அய்சுடின் மேலும் சொன்னார்.

பெர்னாமா