பிஎன் 300 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியுடன் “மீன் பிடிக்கிறது”

மீனவர்களுடைய வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு அல்லது அவர்களுக்கு வீடுகளைக் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை விநியோகம் செய்வதை விரைவுபடுத்துமாறு விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார்,  பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

“இது மக்களைத் தொடும் திட்டமாகும். அதனால் நாம் விரைவாக செயல்பட வேண்டும். நமக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை என்றாலும் அமைச்சின் பணத்தை முதலில் பயன்படுத்துமாறு நான் எனது அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு ஆணையிட்டுள்ளேன்,” என நேற்றிரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்த விளக்கமளிப்பின் போது கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி அமைச்சருமான பிரதமர் அறிவித்த வரவு செலவுத் திட்டத்தில் மீனவர் வீடமைப்புக்கு அந்த நிதி ஒதுக்கப்பட்டது.

மூன்று கட்டங்களாக அந்த நிதி விநியோகம் செய்யப்படும் என நோ சொன்னார்

-நடப்பிலுள்ள வீடுகளை பழுதுபார்ப்பதற்கான விண்ணப்பங்கள்

-புதிய வீடுகளைக் கட்டுவதற்கான விண்ணப்பங்கள்

-புதிய மீனவர் கிராமங்களை உருவாக்குவது, அதற்கான நிதிகள் மாநில அரசாங்கங்கள் வழி கொடுக்கப்படும்

முதல் கட்டத்தை நாம் உடனடியாகச் செய்ய வேண்டும். நாங்கள் 15,498 விண்ணப்ப பாரங்களை வெளியிட்டுள்ளோம். அவற்றை உள்ளூர் மீனவர் சங்கங்கள் சேகரித்து நாடாளுமன்ற விவசாய மேம்பாட்டு மன்றத்துக்குச் (MPPP) சமர்பிக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத் தொகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக 2009ம் ஆண்டு அந்த மன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்குகின்றனர்.

எதிர்க்கட்சிகள் வசமுள்ள தொகுதிகளில் உள்ளூர் பிஎன் தலைவர்கள் தலைமை தாங்குகின்றனர்.