ராயிஸ்: தகவல் சுதந்திரச் சட்டத்துக்கு அவசரமான தேவை இல்லை

மலேசியாவில் ஏற்கனவே மற்ற ‘சுதந்திரங்கள்’ இருப்பதால் தகவல் சுதந்திரச் சட்டத்துக்கு “அவசர அவசியமில்லை” என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.

“நமக்குப் பேச்சு சுதந்திரம், மனித உரிமைகள், தேசிய கணக்காய்வு, ஆதாரங்கள் சட்டம், தகவல் தருவோர் சட்டம், தகவல்களைப் பரப்புவதற்கான இணைய வழி முறைகள் ஆகியவை உள்ளன,” என அவர் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

அவர் பிஎன் ரெம்பாவ் உறுப்பினர் கைரி ஜமாலுதீன் தொடுத்த கேள்விக்குப் பதில் அளித்தார்.

இணையம் போன்ற வழிகளில் தகவல்களை பரப்புவது மீது தமது அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் ராயிஸ் சொன்னார்.

சில குறிப்பிட்ட தகவல்களை பொது மக்கள் பெறுவதற்கு தடை விதிக்கும் அதிகாரத்துவ ரகசியச் சட்டம் இன்னும் தேவையானது என வலியுறுத்திய அவர், ‘தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சில தகவல்களை ரகசியமானது என வகைப்படுத்துவது அரசாங்கத்தின் உரிமை,” என்றார்.