Bantuan Rakyat 1Malaysia அல்லது BR1M உதவித் தொகை மூலம் அதிகமாக நன்மை அடைந்துள்ளது பக்காத்தான் கட்டுக்குள் உள்ள சிலாங்கூர், கிளந்தான் மாநிலங்கள் என்ற தகவலை இன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளியிட்டுள்ளார்.
“BR1M உதவித் தொகைகளைப் பெற்றவர்களில் 13 விழுக்காட்டினர் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள்… குடும்பங்கள் விழுக்காட்டில் கிளந்தான் முன்னணி வகிக்கிறது. அங்கு மொத்தமுள்ள குடும்பங்களில் 84 விழுக்காடு அந்த உதவியைப் பெற்றுள்ளன.”
நஜிப் இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசினார்.
BR1M உதவித் தொகைத் திட்டத்துக்கு இது வரை மொத்தம் 1.92 பில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகை கூட்டரசு நிர்வாகச் செலவுகள் மீதான அங்கீகரிக்கப்பட்ட கருவூல அளிப்பாணைகளிலிருந்து எடுக்கப்பட்டது என அவர் விளக்கினார்.
மொத்தம் 3.8 மில்லியன் குடும்பங்கள் BR1M உதவித் தொகையைப் பெற்றுள்ளன. அந்த எண்ணிக்கை நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களில் 59 விழுக்காடு என்றும் நஜிப் சொன்னார்.
அவர் பிந்துலு பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் தியோங் கின் சிங் எழுப்பிய கேள்விக்குப் பதில்
அளித்தார்.