சோமாலியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மலேசியப் பத்திரிக்கையாளர், சண்டை நிகழும் சோமாலியத் தலைநகர் மொஹாடிசுவில் ஆப்பிரிக்க ஒன்றிய துருப்புக்களுக்கும் துப்பாக்கிக்காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையில் சிக்கிக் கொண்டார் என அதிகாரிகள் கூறினர்.
“ஆப்பிரிக்க ஒன்றிய படைகள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையின் போது மலேசியப் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்தார்”, ஆப்பிரிக்க ஒன்றிய ஆதரவு பெற்ற அரசாங்க இராணுவத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
உலகில் மிகவும் ஆபத்தான தலைநகரங்களில் ஒன்றான மொஹாடிசுவில் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அந்நியர்கள் வேலைக்கு அமர்த்தும் தனியார் குடிப்படையினருடன் அந்தப் பத்திரிக்கையாளர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
“அவர்கள் தங்களுடைய ஹோட்டலுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்காகினர்,’ எனக் கூறிய அலி, மொஹாடிசுவின் கே4 பகுதியில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகச் சொன்னார்.
“என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அந்தச் சம்பவம் குறித்த விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன,” என்றார் அவர்.
கொல்லப்பட்டவர், பெர்னாமா குழுமத்தில் படப் பிடிப்பாளராகப் பணியாற்றும் நோராம்பைசுல் முகமட் நோர் என பெர்னாமா தொலைக்காட்சி அடையாளம் கூறியுள்ளது. திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
காயமடைந்த பத்திரிக்கையாளரான அஜி சாரேகார் மஸ்லான் மலேசிய உதவி நிறுவனம் ஒன்றுடன் மொஹாடிசுவுக்கு ஒரு வாரப் பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்றும் பெர்னாமா தெரிவித்தது.
அவர்கள் இருவரும் மொஹாடிசுவிலிருந்து புறப்பட்டு இன்று தாயகம் திரும்பியிருக்க வேண்டும். மொஹாடிசுவில் இயங்கும் சோமாலியாவுக்கான ஆப்பிரிக்க ஒன்றியக் குழுவுடன் தொடர்பு கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
போட்டி குடிப்படையினருக்கு இடையில் மோதல்கள்
கடந்த பல தசாப்தங்களாக சோமாலியாவை வறட்சி வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் 10 மில்லியன் மக்களில் பாதிப் பேர் மனிதநேய உதவிகளை நம்பியுள்ளனர். அந்த நாட்டில் பல பகுதிகளை பஞ்சம் ஏற்பட்டுள்ள பிரதேசங்கள் என ஐநா அறிவித்துள்ளது.
மொஹாடிசுவில் போட்டி குடிப்படைகளுக்கு இடையில் அடிக்கடி நிகழ்கின்றன. மேற்கத்திய ஆதரவு பெற்ற அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அல் காய்டாவுடன் தொடர்புடைய ஷெபாப் கிளர்ச்சிக்காரர்கள் போராடி வருகின்றனர்.