ரபிடா:அதுவா பதவி விலகல்?

மகளிர், குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில் ‘பதவிவிலகுவதாக’ அறிவித்ததில்  தியாகம் என்பது எதுவும் இல்லை எனச் சாடியுள்ளார் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அசீஸ்.

ஷரிசாட் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் அவரது அமைச்சர் பதவி அவரின் செனட்டர் பதவிக்காலம் ஏப்ரல் 8-இல் முடிவடையும்போது தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என முன்னாள் பன்னாட்டு வாணிக, தொழில் அமைச்சரான ரபிடா குறிப்பிட்டார்.

“அப்புறம் விலகுதல் என்றால்….?எதிலிருந்து விலகுவது? ஏப்ரல் 8-க்குப் பிறகு சட்டப்படி அவர் அமைச்சராக இருக்க மாட்டார் என்கிறபோது  பதவியிலிருந்து இறங்கும் பிரச்னைக்கோ விலகும் பிரச்னைக்கோ இடமே இல்லையே…

“அதனால் தியாகம் என்று எதுவும் இல்லை”, என்று ரபிடா குறிப்பிட்டதாக இன்றைய மலாய் மெயில்  கூறுகிறது.

நேற்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் உள்பட பிஎன் தலைவர்கள் பலரும் ஷரிசாட் பதவி விலகப்போவதாக அறிவித்ததை “மிகப் பெரிய தியாகச் செயல்” என்று வருணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஷரிசாட் அம்னோ மகளிர் தலைவியாக தொடர்ந்து  நீடிக்க முடிவு செய்திருப்பதும் பிரச்னைக்குரியதுதான் என ரபிடா கூறினார்.

அவர் அந்தப் பதவிக்குக் கட்சிப் பேராளர்களால்  தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் தொடர்ந்து இருப்பதாக விலகுவதா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாரவர்.

ரபிடா 2008 பொதுத் தேர்தலில் கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார். ஆனால், 2009-இல் அம்னோ மகளிர் தலைவிக்கான தேர்தலில் ஷரிசாட்டிடம் தோல்வி அடைந்தார்.

ஷரிசாட், லெம்பா பந்தாயில் அரசியலில் ஒரு புதுமுகமான நுருல் இஸ்ஸாவிடம் தோல்வியுற்றார். ஆனால், செனட்டர் ஆக்கப்பட்டு அமைச்சராக இருக்கிறார்.