பங்குச் சந்தையில் தேர்தல்நிதி திரட்டும் அவசியம் அம்னோவுக்கு இல்லை

முன்னாள் நிதி அமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான டயிம் ஜைனுடின், ஆளும் கட்சி தேர்தல் நிதிக்குப் பங்குச் சந்தையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார். தேர்தலைச் சந்திக்க அம்னோவிடமும் பிஎன்னிடமும் போதுமான நிதி ஆதாரங்கள் உண்டு.

ஆளும் கூட்டணி பங்குச் சந்தையிலிருந்துதான் தேர்தல் நிதியைத் திரட்டும் என்பதால் பொதுத் தேர்தலுக்குமுன் பங்குச் சந்தையில் விலைகள் உயரும் என்று ஊகம் தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.

சீன நாளேடான நன்யாங் சியாங் பாவுக்கு வழங்கிய நேர்காணலில், அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் அம்னோவுக்கு இல்லை என்று டயிம் குறிப்பிட்டார்.

ஐரோப்பிய நெருக்கடி தீரும்வரை, சந்தையில் திடீர் உயர்வை எதிர்பார்க்க இயலாது என்பது அவருடைய கருத்தாகும்.

“வெளிச்சந்தைகள் நன்றாக இல்லாத நிலையில் நீங்கள் என்னதான் முயன்றாலும் உள்நாட்டுச் சந்தையை முன்னோக்கி நகர்த்தவியலாது.

“அத்துடன் அம்னோ பங்குகள் பிஎன் பங்குகள் என்று சொல்லப்படும் பங்குகள் இன்னும் இருப்பதாக நான் நினைக்கவில்லை”, என்றவர் கூறியதாக அச்செய்தித்தாள் மேற்கோள் காட்டியுள்ளது.  

தாம் பங்குச் சந்தையைவிட்டு விலகி விட்டதாகவும் டயிம் தெரிவித்தார்.

“நான் இப்போது பங்குகள் வாங்குவதில்லை. அதற்கு நேரமுமில்லை. எனக்கும் வயதாகிவிட்டது. மார்க்கெட்டின் போக்கைத் தெரிந்துகொள்ளக்கூட முயல்வதில்லை. ஒரு வேளை என் பிள்ளைகள் (பங்குகளில் முதலீடு) செய்யக்கூடும்”, என்றாரவர்.