அஜிஸான் விடுமுறையில் செல்வார் ஆனால் இடைக்கால மந்திரி புசாரை நியமிக்க எண்ணவில்லை

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் விடுமுறை எடுப்பதற்கு எண்ணம் கொண்டுள்ளார். ஆனால் தாம் இல்லாத நேரத்தில் தமது பணிகளைச் செய்வதற்கு இடைக்கால மந்திரி புசாரை  நியமிக்க அவர் திட்டமிடவில்லை.

அதனைத் தெரிவித்த அஜிஸான் தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் விடுமுறையில் செல்ல விரும்புவதாக சொன்னார். ஆனால் நீண்ட கால அல்லது குறுகிய கால விடுமுறையை எடுப்பதா என்பது பற்றித் தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.

“விடுமுறையில் செல்வது பெரிய விஷயமல்ல. விமான டிக்கெட்டை வாங்கிக் கொண்டு பெட்டிய எடுத்துக் கொண்டு புறப்பட்டால் நீங்கள் பறந்து விடலாம். அந்த விடுமுறை நீண்டதாகவும் குறுகியதாகவும் இருக்கலாம். ஒருவருடைய பேரப் பிள்ளையைக் கவனிப்பதற்காக யாராவது  ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை.”

“இடைக்கால மந்திரி புசார் தேவை இல்லை. காரணம் எல்லா ஒழுங்காக இருக்கிறது. புயல் ஒய்ந்து விட்டது,” என அலோர் ஸ்டாரில் மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் அஜிஸான் நிருபர்களிடம் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கோலக் கெடா படகுத் துறையில் கண்ணாடிக் கதவு ஒன்றின் மீது மோதிய ஐந்து வயதுச் சிறுவன் பூங் சுன் யூவான் மரணமடைந்த சம்பவம் குறித்து மாநில அரசாங்கம் வருந்துவதாகவும் அஜிஸான் கூறினார்.

அந்தப் படகுத் துறை சம்பந்தப்பட்ட விஷயங்கள் கடல் போக்குவரத்துத் துறையின் கீழ் வருகின்றன. சுற்றுப்பயணிகள், பொது மக்கள் ஆகியோருடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பு எடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பெர்னாமா