எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனத்துக்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுக்கும் இடையில் பங்குகளை பரிவர்த்தனை செய்து கொள்வது மீது செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மறு ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளதாக எம்ஏஎஸ் ஊழியர் சங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அதன் விளைவாக பெரும் இழப்புக்களை எம்ஏஎஸ் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து எம்ஏஎஸ்- ஏர் ஏசியா இணைப்பு கைவிடப்படலாம்.
ஏர் ஏசியாவைத் தோற்றுவித்த டோனி பெர்னாண்டெஸையும் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் எம்ஏஎஸ் நிர்வாக வாரியத்துக்குள் கொண்டு வந்த 364 மில்லியன் அமெரிக்க டாலர் பெறும் ஒப்பந்தத்தை 20,000 உறுப்பினர்களைக் கொண்ட எம்ஏஎஸ் ஊழியர் சங்கம் எதிர்த்து வருகிறது. ஏர் ஏசியா எம்ஏஎஸ்-ஸை எடுத்துக் கொள்வது போன்ற தோற்றத்தை அந்த ஒப்பந்தம் வழங்குவதாக அது வாதாடுகிறது.
எம்ஏஎஸ்-ஏர் ஏசியா உடன்பாட்டை பிரதமர் மறு ஆய்வு செய்வார் என்ற தகவல் குறித்து கருத்துக்களை பெறுவதற்காக அந்த இரண்டு விமான நிறுவனங்களுடைய மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
எம்ஏஎஸ் ஊழியர் சங்க அதிகாரிகள் பிரதமரைச் சந்தித்ததை உறுதி செய்த அரசாங்கப் பேச்சாளர், அந்தக் கூட்டத்தின் விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
2015ம் ஆண்டு தென் கிழக்காசிய திறந்த ஆகாய வெளிக் கொள்கை அமலுக்கு வந்ததும் டைகர் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற போட்டி விமான நிறுவனங்களை எம்ஏஎஸ்ஸும் -ஏர் ஏசியாவும் சமாளிப்பதற்கு உதவியாக அந்த ஒப்பந்தத்தை நஜிப் தயாரித்தார்.
அந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எம்ஏஎஸ் ஊழியர் சங்க அதிகாரிகள் பிப்ரவரி மாதம் நஜிப்பைச் சந்தித்தார்கள்.
அந்த ஒப்பந்தத்தின் விளைவாக எம்ஏஎஸ் தனது நீண்ட தூர, குறுகிய தூர நடவடிக்கைகளை மறு சீரமைப்புச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அதனால் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என எம்ஏஎஸ் ஊழியர் சங்கத் தலைமைச் செயலாளர் அப்துல் மாலிக் அரீப் சந்திப்புக்கு பின்னர் கூறினார்.
2011ம் ஆண்டுக்கு 2.5 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த மாதம் எம்ஏஎஸ் அறிவித்தது. எம்ஏஎஸ்ஸுக்கும் ஏர் ஏசியாவுக்கும் இடையில் பங்குகளை பரிவர்த்தனை ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கையெழுத்தானது. அதன் விளைவாக எம்ஏஎஸ் இழப்பு குறையும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும் இழப்பு ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.