நோ ஒமார் சிலாங்கூர் அரசாங்கம் மீது செக்கிஞ்சாங் பேராளர் மீதும் வழக்குப் போடுகிறார்

விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர் நோ ஒமார் தமது சொந்த அடிப்படையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு எதிராகவும் செக்கிஞ்சாங் சட்ட மன்ற உறுப்பினர் இங் சூ லிம்-முக்கு எதிராகவும் இரண்டு அவதூறு வழக்குகளை சமர்பித்துள்ளார்.

மாநில அரசாங்கம் தனது பத்திரிக்கையான சிலாங்கூர்கினி-யின் 2011ம் ஆண்டு நவம்பர் 25 முதல் டிசம்பர் 2 வரையிலான பதிப்பில் இரண்டு அவதூறு கட்டுரைகளை வெளியிட்டதாக நோ அந்த வழக்கில் கூறிக் கொண்டுள்ளார்.

அந்த கட்டுரைகளில் ஒன்று “நோ பதவி விலக வேண்டும் என நெல் விவசாயிகள் கோருகின்றனர்” எனக் குற்றம் சாட்டுகிறது என்றும் அத்துடன்  “நோ விவசாயிகளுக்குத் துரோகம் செய்து விட்டார். விவசாயிகளுக்கான உதவியாகக் குறிக்கப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட்டை ஏமாற்றினார்” என்னும் வார்த்தைகளைக் கொண்ட பதாதையின் படமும் அத்துடன் வெளியிடப்பட்டிருந்தது என்றும் நோ குறிப்பிட்டுள்ளார்.

“ஒன்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கும் சிலாங்கூர்கினி ஆசிரியர் உட்பட அறுவருக்கும் எதிரானது. இன்னொன்று செக்கிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரானது,” என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

ஒவ்வொரு வழக்கும் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைக் கோருகிறது. அவை மார்ச் 9ம் தேதி தமது வழக்குரைஞர் பிரோஸ் ஹுசேன் அகமட் ஜமாலுதின் வழியாக ஷா அலாம் உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாகவும் நோ தெரிவித்தார்.

தஞ்சோங் காராங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் சிலாங்கூர் பாரிசான் நேசனல் துணைத் தலைவர் என்ற முறையிலும் தமது பதவிகளுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் தாம் அவர்கள் மீது வழக்குத் தொடர முடிவு செய்ததாக அவர் சொன்னார்.

“பொதுத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து பிஎன் தலைவர்களை களங்கப்படுத்துவது, ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது போன்ற பழைய பழக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் மீண்டும் திரும்பியிருப்பதால் நான் அந்த நவடிக்கையை எடுத்தேன்,” என நோ வலியுறுத்தினார்.

அந்த விவகாரம் வழக்கு நிர்வகிப்புக்காக மார்ச் 22ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

பெர்னாமா