பிரதமர் நஜிப்பின் பிறந்த நாள் விருந்து; பில் கட்டியது யார்?

பிரதமர் நஜிப் ரசாக்கின் தனிப்பட்ட விவகாரத்திற்கு ஏற்பட்ட செலவைக் கட்டுவதற்கான செலவுப் பட்டியல் பிரதமரின் அலுவலகத்தின் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது என்று பிகேஆர் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அது நஜிப்பின் பிறந்த நாள் விருந்துக்கான ரிம79,053 சம்பந்தப்பட்ட செலவுப் பட்டியலாகும்.

பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸீ ரம்லி இது சம்பந்தப்பட்ட ஸங்ரீ-லா தங்கும்விடுதி ஆவணங்களை இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டார்.

அந்த ஆவணத்தில் காணப்படும் தகவல்படி கடந்த ஆண்டு ஜூலை 24 இல் பிரதமரின் அதிகாரப்பூர்வமான புத்ரா ஜெயா ஸ்ரீ பெர்டானா இல்லத்தில் 100 பேருக்கான விருந்து நடத்தப்பட்டது.

“அந்த நிகழ்ச்சியில், 47 விதமான அனைத்துலக உணவுகள், நியுசிலாந்து, ஜப்பான் மற்றும் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்பு உணவுகள் உட்பட, பரிமாறப்பட்டன” என்று ரபிஸீ நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அந்த ஆவணத்தின்படி உணவு மற்றும் பானம் போன்றவற்றுக்கு ரிம21,495; மலர் அலங்காரத்திற்கு ரிம31,8000; இரண்டு இசைக்கருவியாளர் குழாமுக்கு ரிம13,038; மற்றும் கையாளும் செலவிற்கு ரிம12,720 ஆகும்.

பிரதமர் நஜிப்பின் மகளின் நிச்சயதார்த்த செலவான ரிம409,767 பற்றி சமீபத்தில் இதே போன்ற செய்தி வெளியிடப்பட்டது. பிரதமர் இலாகா அதை மறுத்துள்ள வேளையில், சம்பந்தப்பட்ட தங்கும்விடுதி செலவுக்கான தொகையை பிரதமர் கட்டியதாக கூறியுள்ளது.

“இதனை மறுக்கும் அறிக்கை விட்டால் மட்டும் போதாது. இது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் காட்ட வேண்டும்”, என்று ரபிஸீகூறினார்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி போலல்லாமல் பிறந்த நாள் விருந்து “பிரதமர் அளிக்கும் தனிப்பட்ட விருந்து” என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் பிரதமர் அலுவலகம் பிரதமர் நஜிப்பை தற்காத்துள்ளது. ரபிஸீ கூறியிருப்பதெல்லாம் தவறு என்று அது கூறிற்று.

பிரதமர் அலுவலகம் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள செய்தியில் அந்நிகழ்ச்சிக்கு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டதாக கூறுவது “முற்றிலும் உண்மையல்ல” என்று கூறுகிறது.

“செலவிடப்பட்டதாக கூறப்படும் தொகையும் தவறானதாகும் என்பதோடு அதற்கான செலவை பிரதமரே கட்டினார்”, என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.