மொத்தமுள்ள போலீஸ்காரர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர் மட்டுமே லஞ்சம் வாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறுகிறார்.
அந்த எண்ணிக்கை மிகச் சிறியதாக இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது புற்றுநோயைப் போலப் பரவி விடும் என்றார் அவர்.
“போலீஸ்காரர்கள் ஊழலானவர்கள் என்று யாராவது ஒருவர் சொல்வதை செவிமடுக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.”
“அது நல்லதல்ல,” என அவர் கோலாலம்பூரில் போலீஸ்-தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்( NKRA )வெளியிட்டுள்ள லஞ்சத்தை நிராகரியுங்கள் என்னும் சுவரொட்டிகளை அறிமுகம் செய்து வைத்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
ஊழலற்ற பண்பாட்டை போலீஸ் படையில் மேலோங்கச் செய்வதற்கு தாம் பாடுபடப் போவதாகவும் அவர் சொன்னார்.
ஊழலான போலீஸ்காரர்கள் பற்றி புகார் செய்யுமாறு இஸ்மாயில் ஒமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
போலீஸ் படையில் ஊழல் உட்பட தவறான நடத்தைகளைத் தடுப்பதற்காக 1980ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட போலீஸ் கட்டொழுங்குத் துறையின் பணித் திறன் குறித்து தாம் மன நிறைவு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சி அடைந்த நாடுகளில் அமலாக்க நிறுவனங்களுடைய நேர்மைக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய நான்கு வகையான ஊழல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஐஜிபி சொன்னார்.
தனிநபர்கள் சம்பந்தப்பட்ட சிறிய அளவிலான ஊழல், நிர்வாக ஊழல், கிரிமினல் ஊழல், அரசியல் ஊழல் ஆகியவையே அவை.
“போலீஸ் அதிகாரி அல்லது போலீஸ்காரர் ஒருவர் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பாக இணையத்தில் அல்லது அச்சு ஊடகங்களில், வலைப்பதிவுகளில் அல்லது யூ டியூப் போன்ற தளங்களில் வீடியோ பதிவுகளில் வெளியாகி அது வேகமாகப் பரவும் ஒவ்வொரு முறையும் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன், வருத்தமடைகிறேன்,” என்றார் இஸ்மாயில் ஒமார்.
இதனிடையே கடந்த ஆண்டு லஞ்சம் கொடுக்க முயன்றவர்களுக்கு எதிராக 157 போலீஸ் அதிகாரிகள் புகார் செய்துள்ளதாக புக்கிட் அமான் NKRA ஊழல் தடுப்புப் பிரிவின் இயக்குநர் ஹிஷாம் நோர்டின் கூறினார்.
பெர்னாமா