2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி கூட்டரசு அரசாங்கத்தை எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றும் முயற்சி தோல்வி கண்டது மீது தாம் சொன்னதாகக் கூறப்படும் கருத்துக்கள் என விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலை சபா மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் சாலே சைட் கெருவாக் மறுத்துள்ளார்.
“பக்காத்தான் ராக்யாட்டுக்கு அல்லது எதிர்த்தரப்புக்கு எம்பி-க்கள் கட்சி மாறுவதாகக் கூறப்படுவதை நான் உறுதி செய்யவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. என் நினைவுக்கு எட்டிய வரையில் அந்த நேரத்தில் எதிர்த்தரப்பு சபாவைச் சேர்ந்த எம்பி-க்களை கவருவதற்கு பெரு முயற்சி செய்தது. ஆனால் அவர்களை ஈர்ப்பதில் அது தோல்வி கண்டது.”
“நடந்தது எல்லாம்… பிஎன் அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க எதிர்த்தரப்பு மேற்கொண்ட “மனோவியல் போர்” என முன்னாள் சபா முதலமைச்சருமான சாலே சொன்னார்.
அவர் கோத்தா பெலுட் அம்னோ மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
சபா, சரவாக் மாநிலங்கள் ஒரங்கட்டப்படுவதாக கூறப்படுவதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி பிஎன்-னிலிருந்து விலகுவதற்கு சபா, சரவாக் அரசியல்வாதிகள் குழு திட்டமிட்டுள்ளதாக பக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்ததற்கு வலுச் சேர்க்கும் வகையில் அம்பலமான அமெரிக்கத் தூதரக அரசதந்திரக் குறிப்பு அமைந்துள்ளதாக நேற்று வெளியான மலேசியாகினி செய்தி ஒன்று கூறியது.
சபாவைச் சேர்ந்த 25 எம்பி-க்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிஎன்-னைக் கைவிடத் தயாராக இருப்பதாக சாலே, அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் சொன்னதாக அந்தக் குறிப்பில் இணைக்கப்பட்டிருந்த வில்கிலீக்ஸ் தகவல் ஒன்று தெரிவித்தது.
அந்த ஆண்டு ஜுன் மாதம் 18ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை சபாவில் நடத்தப்பட்ட பல கூட்டங்களில் அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு பல மூத்த மாநில அரசியல்வாதிகள் “ஆதரவு தெரிவிக்கவில்லை” என்பதையும் தூதரக அதிகாரிகள் கண்டு பிடித்தனர் என்றும் அந்த குறிப்பு கூறியது.
பெர்னாமா