கல்வி முறை மீது வியூகத் திட்டத்தை கல்வி அமைச்சு தயாரிக்கிறது

கல்வி மேம்பாட்டு பெருந்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்குத் தேவையான கருத்துக்களைப் பெறுவதற்காக அடுத்த மாதம் தொடக்கம் தேசிய ரீதியில் கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு நடத்தவிருக்கிறது.

இவ்வாறு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அறிவித்துள்ளார்.

தேசியக் கல்வி முறையின் எதிர்காலப் பாதையை வகுப்பதற்கு அந்தத் திட்டம் பயன்படுத்தப்படும் என கல்வி அமைச்சருமான முஹைடின் இன்று மக்களவையில் கூறினார்.

“செப்டம்பர் மாத இறுதிக்குள் பூர்வாங்க பெருந்திட்டம் தயாராகி விடும்;  இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் தயாராகி விடும்; அதனைத் தொடர்ந்து புதிய கல்வி வியூகத் திட்டம் உருவகம் பெறும்,” என அவர் கேள்வி நேரத்தின் போது கூறினார்.

அறிவாற்றல், ஆன்மீக, தார்மீக, உடல் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுடைய வளர்ச்சி சம நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சு நடப்பு கல்வி முறையை மறு ஆய்வு செய்ய எண்ணம் கொண்டுள்ளதா என அறிய விரும்பிய பிந்துலு உறுப்பினர் தியோங் கிங் சிங்-கிற்கு முஹைடின் பதில் அளித்தார்.

கல்வித் தலைமை இயக்குநர் தலைமையில் இயங்கும் திட்ட நிர்வாக அலுவலகம் கல்வி மதிப்பீட்டு முறையை அமலாக்கும் என்றும் அவர் சொன்னார். அது அடையாளம் காணப்பட்டுள்ள 9  முன்னுரிமைப் பகுதிகளைப் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளும் என்றார் முஹைடின்.

ஆசிரியர்கள், பள்ளிக்கூடத் தலைவர்கள், கல்வித் தரம், பாடத் திட்டமும் மதிப்பீடும், பல மொழிகளில் தேர்ச்சி, இடைநிலைக் கல்விக்குப் பிந்திய வாய்ப்புக்கள், பெற்றோர்களும் சமூகங்களும், ஆதார மய்யங்களின் திறன், கல்விப் பட்டுவாடா முறை ஆகியவை அந்த 9 துறைகளாகும்.