டைம்: நஜிப் அதிக இடங்களை வெல்லத் தவறினால் போக வேண்டியிருக்கும்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிஎன் தேர்தல் வெற்றிகளை அடுத்த பொதுத் தேர்தலில் மேம்படுத்த தவறினால் அம்னோ அவரை விரட்டி விடும் என முன்னாள் நிதி அமைச்சரும் நீண்ட கால அம்னோ பொருளாளருமான டைம் ஜைனுடின் கூறுகிறார்.

“மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மீண்டும் பெற வேண்டும் என்பது நல்ல இலட்சியம் தான். ஆனால் நஜிப் உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர் அதிகமான  இடங்களை இழந்தால் அம்னோ அவரை விலக்கி விடும். இது தான் அரசியல்,” என்றார் அந்த அம்னோ மூத்த உறுப்பினர்.

அவர் சின் சியூ ஜிட் போ என்னும் சீன மொழி நாளேட்டுக்கு வழங்கியுள்ள சிறப்புப் பேட்டியில் அவ்வாறு கூறியுள்ளார்.

“தேர்தலில் வெற்றி பெறத் தவறும் அரசியல் தலைவரை நீக்குவது உலக அளவில் நடைபெறும் நிகழ்வாகும்.  அது அம்னோவில் மட்டும் நிகழவில்லை.”

நாட்டின் பொருளாதார அடைவு நிலை வலுவாக இருந்து அம்னோ ஒர் ஐக்கியமான குழுவாகப் போட்டியிட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் மோதுவதற்கு நஜிப் கரங்கள் மேலோங்கியிருக்கும் என்றும் டைம் குறிப்பிட்டார்.

“ஆனால் நஜிப் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது அதன் பொருள் அல்ல. டென்னிஸ் விளையாட்டைப் போன்று நீங்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் கரங்கள் மேலோங்கியிருந்தாலும் நீங்கள் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தத் தவறும் உங்களுக்கு ஆட்டத்தில் தோல்வியைத் தந்து விடும்.”

அம்னோ தலைமைத்துவப் பொறுப்பிலிருந்து நஜிப் விலகினால் அடுத்த தலைவர் பெரும்பாலும் கட்சித் தேர்தல் மூலம் முடிவு செய்யப்படுவார் என டைம் கருதுகிறார்.

“வழக்கமாக துணைத் தலைவர் அடுத்த தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாலும் இந்த முறை தலைவர் பதவிக்கு மற்றவர்களும் சவால் விடுக்கக் கூடும். காரணம் ஒவ்வொருவரும் பிரதமராக ஆசைப்படுகின்றனர்.”

என்றாலும் நஜிப்-புக்கு டைம் புகழாரம் சூட்டினார். ஏனெனில் அவருக்கு முன்பு இருந்த பிரதமர்களுடன் ஒப்பிடுகையில் நஜிப் மக்களுக்கு செவி சாய்ப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வது, ஊழலை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் நஜிப் காட்டும் ஈடுபாடு அதனை மெய்பிக்கின்றது.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டின் நெருங்கிய சகாவான டைம் 1984ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அம்னோ பொருளாளராக இருந்தார்.

அவர் 1984ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை நிதி அமைச்சராகவும் பின்னர் 1991ல் பிரதமர் துறையில் சிறப்புப் பணிகளுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார். 1999ல் மீண்டும் நிதி அமைச்சரானார். 2001ல் ஒய்வு பெற்றார்.

‘டைம் ஆரூடம்’

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக டைம், பிஎன் பினாங்கு, சிலாங்கூர், கெடா ஆகியவற்றை இழக்கும் என எச்சரித்திருந்தார். “டைம் ஆரூடம்” 2008 மார்ச் 8 ‘அரசியல் சுனாமியில்’ உண்மையானது.

அடுத்த தேர்தலில் பினாங்கும் கிளந்தானும் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட் கோட்டைகளாக இருக்கும் என டைம் எதிர்பார்க்கிறார்.

“கெடாவிலும் சிலாங்கூரிலும் பிஎன் -னுக்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் அம்னோ ஒற்றுமையாக இருக்க வேண்டும். மந்திரி புசார் பொறுப்பை ஏற்பதற்குச் சிறந்த வேட்பாளரை அது கண்டு பிடிக்க வேண்டும்.”

பேராக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பிஎன் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். ஏனெனில் அந்த மாநிலத்தை பிஎன் எடுத்துக் கொண்டது மீதான சர்ச்சையால் எழுந்த அரசாங்க எதிர்ப்பு உணர்வு இன்னும் வாக்காளர்களிடையே காணப்படுகிறது என்றார் அந்த முன்னாள் நிதி அமைச்சர்.

கிளந்தானைப் பொறுத்த வரையில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மந்திரி புசாராக இருக்கும் வரையில் பிஎன் அந்த மாநிலத்துக்கு பிரியாவிடை கொடுத்து விடலாம் என அவர் கருதுகிறார்.

வெற்றிக்கு வழிகள்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ‘வழி முறைகளையும்’ டைம் நஜிப்புக்கு அந்தப் பேட்டியில் வழங்கினார்.

“நான் பிரதமராக இருந்தால் நான் நடப்பு சபா, சரவாக் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதிலும் தீவகற்பத்தில் பிஎன் வசமுள்ள இடங்களிலும் கவனம் செலுத்துவேன். கடந்த பொதுத் தேர்தலில் குறைந்த வாக்குகளில் பிஎன் தோல்வி கண்ட இடங்கள் மீது கூடுதல் ஈடுபாடு காட்டுவேன்,” என்றார் அவர்.

“எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் எல்லா இடங்களுக்கும் செல்கின்றீர்கள். உங்களுக்கு வாக்குகள் எங்கு கிடைக்கும் என்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது என்றால் நீங்கள் உங்கள் நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.”

“சரியான நேரமும் முக்கியமான அம்சமாகும். அது சிறந்த தேர்தல் முடிவுகளை நஜிப் பெறுவதற்கு வாய்ப்புக்களை அதிகரிக்கும்.”

“தேர்தல் ஒரு சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. அது போட்டி ஆகும். நான் பிரதமராக இருந்தால் அந்த ஆட்டத்தை எப்படி விளையாடுவது என்பது எனக்குத் தெரியும். அது மகாதீருக்கும் தெரியும் என நான் எண்ணுகிறேன்,” என டைம் பேட்டியை நிறைவு செய்தார்.