காலித் தமது வாக்குத் தொகுதி மாறியிருப்பது பற்றி குழம்பிப் போயிருக்கிறார்

சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வாக்களிக்கும் தொகுதி  அவருக்குத் தெரியாமல் மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் மேற்கொண்ட சோதனைகள் வழி அது தெரிய வருகிறது.

பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வசமுள்ள லெம்பா பந்தாய் தொகுதியில் காலித் இப்போது புதிய வாக்காளர் ஆவார்.

அவர் வாக்களிக்க வேண்டிய இடம் யூனிவர்சிட்டி வாக்களிப்பு மாவட்டத்தில் உள்ள Rumah Kakitangan Universiti ஆகும்.

ஆனால் மந்திரி புசார் ஏற்கனவே பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களித்துள்ளதாகத் தெரிய வருகிறது. அங்கு அவர் எவ்வளவு காலம் வாக்காளாராக இருக்கிறார் என்பது தெரியவில்லை.

அந்தத் தகவல் குறித்து விவரம் அறிய மந்திரி புசார் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளப்பட்டது.

அங்கிருந்த, தம்மை அடையாளம் கூற விரும்பாத ஒர் அதிகாரி, காலித் தமது வாக்களிப்புத் தொகுதி தொடர்பிலும் அடையாளக் கார்டிலும் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை எனச் சொன்னார்.

“அவருக்குத் தெரிந்த அவரை அவர் இன்னும் பெட்டாலிங் ஜெயா செலத்தான் வாக்காளராகத்தான் இருக்கிறார். அடையாளக் கார்டில் உள்ள வரது முகவரி பாசிர் துந்துங், கோலா சிலாங்கூர் என்பதாகும். அது அவருடைய சொந்த ஊர் ஆகும்,” என மந்திரி புசாருக்கு மிக அணுக்கமான அந்த வட்டாரம் கூறியது.

அண்மையில் மந்திரி புசாருக்கு அது குறித்து தகவல் கொடுக்கப்பட்ட போது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்கலாம் என அவர் “கவலை” தெரிவித்தார் என்றும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

அந்த விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையத்துடனும் பதிவுத் துறையுடனும் தாம் தொடர்பு கொள்ளப் போவதாகவும் காலித் தெரிவித்தார்.

லெம்பா பந்தாய் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றத் தொகுதி ஆகும். அது பெட்டாலிங் ஜெயா செலத்தானை எல்லையாக கொண்டுள்ளது.

மந்திரி புசாருக்கு எதிரான சதி வேலையா ?

மந்திரி புசார் லெம்பா பந்தாயில் “ஆவி வாக்காளராக” மாறியுள்ளார் என செபுத்தே அம்னோ இளைஞர் தலைவர் முகமட் ரஸ்லான் முகமட் ராபியி தமது வலைப்பதிவில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து மலேசியாகினி சோதனைகளை மேற்கொண்டது.

மந்திரி புசார் தமது அடையாளக் கார்டு முகவரியை மாற்றினால் மட்டுமே வாக்களிக்கும் தொகுதி மாற முடியும் என கூறிய முகமட் ரஸ்லான், அது காலித்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உள் சதி வேலையாக இருக்கலாம் எனக் கூறிக் கொண்டார்.

காலித் கோலாலம்பூர் குடியிருப்பாளர் என அவரது அடையாளக் கார்டு காட்டினால் அவர் சிலாங்கூர் சட்ட மன்ற உறுப்பினராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு போட்டியிட முடியாமல் போகலாம்.

ஒருவர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டுமானால் அவர் அந்த மாநிலத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் எனக் கூட்டரசு அரசமைப்பு கூறுகிறது.

அத்துடன் மந்திரி புசாராக இரண்டாவது தவணைக் காலத்துக்கு தேர்வு செய்யப்பட முடியாமல் போகும் என்பதும் அதன் அர்த்தமாகும்.

“காலித்தை ஆவி வாக்காளராக மாற்றியதற்கு அவர்கள் எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அது காலித்-தின் அரசியல் வாழ்க்கையை சீர் குலைப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது தெளிவாகும்,” முகமட் ரஸ்லான் தமது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.

மலேசியாகினி பிகேஆர் தேர்தல் இயக்குநர் அஸ்மின் அலி-யின் கருத்துக்களைப் பெறுவதற்காக அவருடன் தொடர்பு கொண்டது. ஆனால் எங்களுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.