காலித்தின் வாக்களிப்புப் பகுதியை மாற்றியதின் மூலம் இசி சட்டத்தை மீறியுள்ளது

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் வாக்களிப்புத் தொகுதியை பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து லெம்பா பந்தாய்க்கும் மாற்றியதின் மூலம் இசி என்ற தேர்தல் ஆணையம் 1958ம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ் ‘கடுமையான குற்றத்தை’ புரிந்துள்ளது.

இவ்வாறு பிகேஆர் உதவித் தலைவர் பூஸியா சாலே கூறியிருக்கிறார்.

தொகுதிகளைப் பிரிப்பதற்கான விதிமுறைகள் ஒரு வாக்காளருடைய இடத்தில் மாற்றங்களை செய்யலாம் எனக் கூறுவதாக அவர், இசி இணையத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டி கூறினார்.

ஆனால் அந்த நடவடிக்கை அந்த வாக்காளரின் குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

“இசி ஒரு வாக்காளரை அவருக்குத் தெரியாமல் அவரது சொந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற வாக்களிப்புத் தொகுதியிலிருந்து மாற்றுவதற்கு இசி-க்கு அனுமதி வழங்கப்படவில்லை.”

“காலித்துக்கு அதுதான் நடந்துள்ளது,” என பூஸியா பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்
 
“இசி சட்ட விரோதமான ஒன்றைச் செய்வதற்கு சட்டப்பூர்வ வழிகளைப் பயன்படுத்தியுள்ளது.”

காலித்தை புதிய நாடாளுமன்றத் தொகுதிக்கு மாற்றியதின் மூலம் இசி தொகுதி எல்லை மறு நிர்ணய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என அந்த குவாந்தான் எம்பி சொன்னார்.

“தொகுதி எல்லைகள் மறு நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளை இசி எப்போதும் தில்லுமுல்லு செய்வதற்குப் பயன்படுத்தி வந்துள்ளது. அந்த நடவடிக்கையை அது மேற்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது முடியாது. காரணம்  கூட்டரசு அரசமைப்புக்கு இணங்க நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் இல்லாமல் அதனை செய்ய முடியாது,” என்றார் பூஸியா.

தொகுதி எல்லைகளை மறு நிர்ணயம் செய்வது போன்று தோற்றமளிக்கும் அந்த நடவடிக்கை காலித்தை மட்டும் பாதிக்கவில்லை. நாடு முழுவதும் 31,294 வாக்காளர்களை பாதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

TAGS: