பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அம்னோ மகளிர் பகுதி தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலும் அடுத்த வாரம் மகளிர் பகுதியைச் சந்தித்து ஷாரிசாட் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான சூழலை விளக்குவர்.
“நாடு முழுவதிலுமிருந்து ஏழாயிரம் மகளிர் பேராளர்கள் திரள்வார்கள்.அதில் எல்லாம் விளக்கப்படும்”, என்று மகளிர் பகுதி உதவிச் செயலாளர் ரோஸ்னி ஸொஹார் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பிரதமரைச் சந்திக்கும் அக்கூட்டம் அம்னோ தலைமையகம் அமைந்துள்ள புத்ரா உலக வாணிக மையத்தில் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
“ஷாரிசாட், பிரதமர் இருவருமே பேராளர்களுக்கு விளக்கமளிப்பர்”, என்று ரோஸ்னி தெரிவித்தார்.
இந்த ஒரு விளக்கமளிப்பு மட்டுமே நடைபெறும் என்றும் ஏற்கனவே திட்டமிட்டதுபோல் நாடு முழுக்க தொடர் விளக்கக்கூட்டம் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் சொன்னார்.
“எங்களில் பலருக்கு எங்கள் தொகுதிகளில் அலுவல் அதிகம் இருப்பதால் தொடர்விளக்ககூட்டம் நடத்த நேரமில்லை.இதுபோல் ஒரு விளக்கமளிப்பே போதும்”.
ஷாரிசாட்டின் பதவி விலகல் மறைமுகமாக ஒரு வரப்பிரசாதம் ஆகும் என்றும் ரோஸ்னி நினைக்கிறார்.
“தேர்தல் வருவதால் மகளிர் பகுதியை வலுப்படுத்த இனி அவர் அதிக நேரம் செலவிடலாம்”, என்றாரவர்.
ஷரிசாட் மகளிர் தலைவி பதவியிலிருந்து விலகும் சாத்தியம் உண்டா என்று வினவியதற்கு அதற்கு வாய்ப்பில்லை என்றார்.
ஷரிசாட், ஏப்ரல் 8-இல் மகளிர், குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார்.