சாபாவில் ஆர்சிஐ அமைய சாத்தியமில்லை

சாபாவின் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீது அரச விசாரணை ஆணையம் அமைவதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்கத் தூதரகத்தின் இரகசிய ஆவணம் ஒன்று தெரிவித்துள்ளது. அது “மகாதிர் கால அரசியல்வாதிகளின்” சுயநலத்தின் காரணமாக உருவான பிரச்னையாம்.

விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணம், கூட்டரசு அரசாங்கமும் அம்னோவும் அரசியல் ஆதரவுபெறும் நோக்கில் சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு மலேசியக் குடியுமைப் பத்திரம் கிடைப்பதற்கு வசதிகளைச் செய்து கொடுத்தன என்று அது கூறியது. 

பணி ஓய்வுபெற்ற மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் நிர்வாகம் “மாநிலத்தில் இன,சமயச் சமன்பாடு சமன்செய்யப்பட வேண்டும் என்பதற்காக அண்டைநாடுகளான இந்தோனேசியாவிலிருந்தும் பிலிப்பீன்சிலிருந்தும் சட்டவிரோத குடியேற்றத்துக்கு வசதி செய்துகொடுத்தது” என்பதை ஒப்புகொண்டார் என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.

“எதிர்காலத்தில் சாபாவில் பிரிந்து செல்லும் சிந்தனைகள் தோன்றாமல் தடுப்பதற்கும் அம்னோவுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைப்பதற்கு உதவியாக இருக்கும்” என்பதாலும் அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“இந்நிலையில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது முறையாக செயல்பட்டால் அதில் அம்னோ/பிஎன்னின் அரசியல் ஊழல்கள் அம்பலமாகும்.  அது சாபா மக்களை மேலும் கொந்தளிக்க வைக்கும்”, என்று 2008 செப்டம்பர் 5 எனத் தேதியிடப்பட்ட அந்த ஆவணம் கூறியது.

நீண்டகாலமாக இருந்துவரும் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசுக்கு, சாபா அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் நீண்ட காலமாகவே  கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். 1994-இல், ஒன்பதாண்டுக்காலம் ஆட்சியில் இருந்த மாற்றரசுக்கட்சியான பிபிஎஸ் ஆட்சியிலிருந்து இறக்கப்பட்ட பின்னர்தான் நிலைமை பெரிதும் மோசமடைந்ததாக அவர்கள் கூறிக்கொள்கின்றனர். 

அம்மாநிலத்தின் சட்டவிரோத குடியேற்றப் பிரச்னைக்கான காரணங்களை ஆராய, அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று.

அண்மையில் அக்கோரிக்கையை  முன்வைத்திருப்பவர் உப்கோ தலைவரும் தோட்டத்தொழில் மூலப் பொருள் அமைச்சருமான பெர்னார்ட் டொம்பொக்.

டொம்பொக் இவ்வாறு கூறியிருப்பது முதல் முறை அல்ல. 2008-இலேயே அவர், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது  சட்டவிரோத குடியேறிகளுக்கு மலேசியக் குடிமக்களுக்குரிய ஆவணங்களை வழங்குவோரைக் கண்டுபிடிக்க அரச விசாரணை ஆணையம் தேவை என்று கூறியுள்ளார்.

அவ்வப்போது சாபாவில் சட்டவிரோதக் குடியேற்றக்கார்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் “வெறும் கண்துடைப்பு வேலைகள்” என்று கூறும் அந்த ஆவணம் சாபா மக்களைப் பொறுத்தவரை  அப்பிரச்னைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் காட்டிக்கொள்ளவே சில குடியேறிகள் அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாகக் கருதுகிறார்கள் என்றும் அது  குறிப்பிட்டுள்ளது.

அப்போதைய சுஹாகாம் உதவித் தலைவர் சைமன் சிபாவுன், சாபாவில் 1.9 மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் இருக்கலாம் என்று மதிப்பிட்டார் என்றும் அது கூறிற்று. இது, மத்திய அரசின் மதிப்பீடான 240,000 பேர் என்பதைவிட  பன்மடங்கு பெரிய தொகையாகும்.

திருப்பி அனுப்பப்பட்ட பிலிப்பினோக்களில் பலர், “சில வாரங்கள் கழித்து” மீண்டும் திரும்பி வந்து விடுவதாக இன்னொருவரை, வெளியுறவு அமைச்சின் உதவிச் செயலாளர் முகம்மட் ரட்சி ஜமாலுடினை மேற்கோள்காட்டி அது கூறிற்று.

சாபாவில், தேர்ந்தெடுத்த  பகுதிகளில்தான் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை  மேற்கொள்ளப்படுகிறது என்றும் “குடியேறிகள் வேலை செய்யும் முக்கியமான இடங்கள்(தயாரிப்புத்துறை, வெட்டுமரத்தொழில், செம்பனைத் தோட்டங்கள், சேவைத்துறைகள்) தவிர்க்கப்படுகின்றன” என்றும் அது குறிப்பிட்டது.  

தொடக்கத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது உண்மைதான் ஆனால் உள்ளூர் வணிகர்கள் முறையிட்டதை அடுத்து அந்நடவடிக்கைக்குத் திட்டமிட்ட போலீஸ் அதிகாரி கண்டிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டதாக சாபா செய்தியாளர் ஒருவர் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

“குறைந்த சம்பளத்தில் அந்நிய தொழிலாளர்களை வேலைகளுக்கு வைத்துக்கொள்வது பொருளாதாரத்தின் பல துறைகளுக்கு உதவியாக இருந்தாலும் சட்டவிரோதக் குடியேற்றம் குறித்து சாபா மக்கள் அதிகமாகவே கவலை கொண்டிருக்கிறார்கள்.

“பலர், சட்டவிரோதக் குடியேறிகள் குறிப்பாக பிலிப்பீனோ முஸ்லிம்கள், பெரும்பாலும் கத்தோலிக்க பூர்வீக  மக்களைக் கொண்ட சாபாவின் அரசியல் சமன்பாட்டைச் சீர்குலைத்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

“சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதில் சாபா மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது பிஎன் அரசின்மீதும் தீவகற்ப மலேசியாவை மையமாகக் கொண்ட அதன் கொள்கைகள்மீதும் அவர்களுக்கு ஓடுமொத்தமாக நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதைத்தான் காண்பிக்கிறது”, என்று அந்த ஆவணம் மேலும் கூறியுள்ளது.