இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஈப்போவில் பொதுக்கூட்டம்

இலங்கை அரசின் அரக்கத்தனமான போர் தர்ம மீறல்களால் குண்டடிக்கும் ,செல்லடிக்கும் செங்குருதி சிந்தி உயிர் துறந்த ஆயிரமாயிரம் அப்பாவி தமிழர்களின் மரண ஓலங்கள், ஐக்கிய நாட்டு மன்றத்தின், மனித உரிமை ஆணையத்தில், நீதி கேட்டு  எழுப்பும்  ஆராய்ச்சி மணியொலியாய் அதிர்ந்து கொண்டிருப்பது நமக்குத் தெரியும்.

47 நாடுகளடங்கிய  இவ்வாணையத்தில் தர்மத்திற்கு எதிராய் நம் நாடு குரல் கொடுத்துவிடுமோ என்ற நெருடல் மலேசியத் தமிழ் நெஞ்சங்களில்  நம் தலைவர்களின் மௌனத்தின் மூலம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகிறது.

மார்ச் 22  அல்லது 23-ஆம் தேதிகளில் இலங்கை தமிழர்களுக்கு இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக அமரிக்கா கொண்டு வரும் தீர்மானம், வாக்களிப்பின் மூலம் வெற்றியடைய  மலேசியத் தமிழர்களாகிய நமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தவும் அதே சமயத்தில் மலேசிய அரசு இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தவும் பேராக் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தினர்  பொது கூட்டமொன்றிற்கு  ஏற்பாடு செய்துள்ளனர்.

இப்பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 18-ஆம் தேதி ஈப்போ, புந்தோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் ‘அருளொளி’ மண்டபத்தில் மாலை 4 .00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் வி.சம்புலிங்கம் , சுவாராம் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், செம்பருத்தி.கொம் ஆசிரியர் குழுமத்தை சேர்ந்த திரு ஜீ.வி.காத்தையா, சமூக ஆர்வலர் திரு.வரதராசு ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற வரிகளுக்கு நாம் உயிரூட்டும்  காலத்தின் அவசியம் உணர்ந்து, இலங்கை  அப்பாவி தமிழர்களின் துயர் நீங்கவும்  அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மலேசிய அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் இப்பொதுக்கூட்டத்தில் சுற்று வட்டார தமிழர்கள் திரளாக கலந்து தமது தமிழுணர்வை வெளிப்படுத்துமாறு பேராக் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் திரு.ரமேஷ்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறார்.

நிராயுதபாணிகளாய் தஞ்சமடைந்து திக்கற்று நின்ற தமிழின முதியோர்களையும் இளைஞர்களையும் யுவதிகளையும் குழந்தைகளையும் வெறித்தனமாய் கொன்று குவித்த இலங்கை அரசுக்கெதிராக, தமிழர்களின் பிணக் குவியல்களிலிருந்து வழிந்தோடிய குருதிப்புனல் பாசனத்திலாவது நமது ஒற்றுமை பயிர் வளர்ப்போம் !! தமிழ் நெஞ்சங்களே திரண்டு வாருங்கள் !!!