ஷாரிஸாட் உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் சிங்கப்பூர் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உணவு விடுதிகள், உணவுப் பொருள், எரிபொருள் வாணிகம், முதலீடுகள், பேரங்காடிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பல தொழில்களை ஷாரிஸாட் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நான்கு நிறுவனங்களைp பற்றி  அந்த தீவுக் குடியரசிலிருந்து வெளியாகும் தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

அவற்றுள்ள ஒன்று முதலீட்டு நிறுவனமாகும். Icube Investments Pte Ltd என்ற அதன் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர் ஆகும். (2.4 மில்லியன் ரிங்கிட்).

சிங்கப்பூர் கணக்கியல் நிறுவன கட்டுப்பட்டு வாரியத்திடமிருந்து பெறப்பட்ட அந்த நிறுவன விவரங்களின் படி ஷாரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயிலும் அவர்களது புதல்வர் வான் ஷாஹினுர் இஸ்ரானும் இயக்குநர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆவர்.

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் மூன்று நிறுவனங்களை அம்பலப்படுத்தியுள்ளன. அவை வருமாறு: Global Biofuture Pte Ltd, Meatworks (Singapore) Pte Ltd, Farmhouse Supermarkets Pte Ltd.

புதல்வியும் இரண்டு புதல்வர்களும் இயக்குநர்கள்

சாலே, இஸ்ரான் ஆகியோருடன் ஷாரிஸாட்டின் புதல்வி வான் இஸ்ஸானா பாத்திமா ஸாபேடாவும் இன்னொரு புதல்வரான ஷாஹினுர் இஸ்மிரும் அந்த நிறுவனங்களில் இயக்குநர்களாக உள்ளனர்.

தேசிய விலங்குக் கூடத்தை மேம்படுத்துவதற்காக என்எப்சி-க்கு அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் மற்ற நிறுவனங்களுக்கு அவர்களுடைய சொந்தப் பெயர்களில் மாற்ற விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ளன.

அந்த நான்கு நிறுவனங்களின் மொத்தம் செலுத்தப்பட்ட மூலதனம் 3.65 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அல்லது  8.85 மில்லியன் ரிங்கிட் ஆகும்

அந்த நான்கு நிறுவனங்களும் ராபிள்ஸ் பிளேஸில் உள்ள கிளிப்போர்ட் செண்டரை ஒரே முகவரியைக் கொண்டுள்ளன. என்றாலும் அது வோங் அலயன்ஸ் என்னும் சட்ட அலுவலகத்தின் பதிவு செய்யப்பட்ட முகவரியும் அலுவலகமும் ஆகும் என அந்த ஏடு குறிப்பிட்டது.

2007ம் ஆண்டு தேசிய விலங்குக் கூட மய்யத் திட்டத்தை ஷாரிஸாட் குடும்பம் பெற்ற பின்னர்  அந்த நான்கு நிறுவனங்களும் தோற்றுவிக்கப்பட்டதை மலேசியாகினி கண்டது. அரசாங்கம் வழங்கிய கடனிலிருந்து 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மில்லியன் ரிங்கிட்டை அது எடுத்தது.

சிங்கப்பூரில் விலை உயர்ந்த ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளும் அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமாக உள்ளன. அதில் ஒன்று மிகவும் ஆடம்பரமான ஆர்ச்சர்ட் ஸ்காட்ஸ் பகுதியில் உள்ளது.

அந்த ஊழல் விவகாரம் எழுந்தததைத் தொடர்ந்து ஷாரிஸாட், அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் தமது செனட்டர் பதவி முடிவுக்கு வரும் போது தமது அமைச்சர் பதவியைத் துறப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: