உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிரஞ்சு கடல் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் மீது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ள மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு பாரிஸைத் தளமாகக் கொண்ட அரசாங்க வழக்குரைஞர்களின் புலனாய்வுப் பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் கிடைக்கும்.
பிரஞ்சு நீதித் துறையில் அந்தப் புகார் வெற்றி பெறும் என சுவாராம் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இறுதியில் நீதிமன்றத்தில் அந்த வழக்கு செவிமடுக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளாக “மூச்சை இறுக்கப் பிடித்துக் கொண்டு” காத்திருந்ததாக சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.
“புதிய தரகுப் பணம் கொடுக்கப்பட்டது, போக்குவரத்துச் செலவுப் பட்டியல்கள், செலுத்தப்பட்ட மற்ற தொகைகள் பற்றி அரசு வழக்குரைஞர் அலுவலகம் விவரிக்கத் தொடங்கிய போது எங்களால் நம்பவே முடியவில்லை,” என அவர் நேற்று நிருபர்களிடம் கூறினார்.
“சமர்பிக்கப்பட்ட புகாருடன் அல்தான்துயா ஷாரிபு கொலைக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் பணத்துடனும் கையூட்டுக்களுடனும் பிணைந்துள்ளது,” என்றார் அவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தற்காப்பு அமைச்சராக இருந்த 2002ம் ஆண்டு மலேசிய அரசாங்கம் இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளை மொத்தம் 7.3 பில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கியது.
சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதலில் தரகராக பணியாற்றியதற்காக அப்துல் ரசாக் பகிந்தாவுடன் தொடர்புடைய பிரபலம் இல்லாத பெரிமேக்கர் என்னும் நிறுவனத்துக்கு 114 மில்லியன் யூரோ அல்லது 570 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அப்துல் ரசாக் பகிந்தா நஜிப்பின் அணுக்கமான நண்பரும் மங்கோலிய மொழி பெயர்ப்பாளர் அல்தான்துயாவின் முன்னாள் காதலரும் ஆவார்.
பெரிமேக்கர் வழங்கிய “ஒருங்கிணைப்பு ஆதரவு” சேவைகளுக்காக அந்தப் பெருந்தொகை கொடுக்கப்பட்டது என அரசாங்கம் கூறியது.
அல்தான்துயாவைக் கொலை செய்ததாக 2006ம் ஆண்டு அப்துல் ரசாக் மீதும் நஜிப்பின் இரண்டு மெய்க்காவலர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அப்துல் ரசாக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிரான்ஸில் அந்த வழக்கை மேற்பார்வையிடுவதற்கு இரண்டு நீதிபதிகள்- Roger Le Loire, Serge Tournaire- நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிந்தியா தெரிவித்தார்.
“அது மிக நல்ல செய்தி. வழக்கமாக ஒரே ஒரு நீதிபதி மட்டும் நியமிக்கப்படுவார். அந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் உடையது எனக் கருதப்படுகிறது என்பதே அதன் பொருளாகும்,” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.