பினாங்கு பேச்சாளர் சதுக்கத்தில் பிஎன்னை வறுத்தெடுத்தனர் மூத்த குடிமக்கள்

பினாங்கு எஸ்பிளேனேட்டில் 2010-இல் உருவாக்கப்பட்ட பேச்சாளர் சதுக்கம் பலரையும் கவர்ந்து வருகிறது.குறிப்பாக, மூத்த குடிமக்கள் அங்கு வருகிறார்கள். பல விவகாரங்கள் பற்றி நயமாகவும் நகைச்சுவையாகவும் பேசிப் பலரையும் கவர்கிறார்கள்.

நேற்று, ஓய்வுபெற்ற வணிகரான அல்பிரெட் சார்லி, பிஎன் ‘திறந்த இல்ல உபசரிப்பை’யும் அண்மையில் பினாங்கு டிஏபி நடத்திய நிதிதிரட்டு விருந்தையும் ஒப்பிட்டுப் பேசிக் கலகலப்பூட்டினார்.

சுமார் 100 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில்  உரையாற்றிய அல்பிரெட்,59,சீன மலேசியர்களில் 90 விழுக்காட்டினர் முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு ஆதரவாக இருப்பதாய்க் குறிப்பிட்டார்.

டிஏபி விருந்துபசரிப்பில் கலந்துகொள்ள அவர்கள் ஆளுக்கு ரிம60 கொடுத்தார்களே அதுவே அதற்குச் சான்று என்றாரவர்.

“அதனால்தான் டிஏபியால் ஒரே இரவில் அரை மில்லியன் ரிங்கிட் திரட்ட முடிந்தது.. அவர்களின் விருந்தில் கலந்துகொள்ள வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் பிஎன்னைப் போல் அல்ல. அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது”, என்றார் அல்பிரெட். அல்பிரெட் அடிக்கடி பேச்சாளர் சதுக்கத்தில் பேசும் பேச்சாளர்களின் ஒருவர்.

“பிஎன் தலைவர்கள் ‘திறந்த இல்ல உபசரிப்பு’க்கு ஏற்பாடு செய்ய நம் பணத்தை(வரிப்பணத்தை)ப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அங்கு ஆளுக்கு ஒரு துண்டு கோழி இறைச்சிதான். அதற்குமேல் கிடையாது”.

மூத்தவர் ஒருவர், மாநில அரசு மூத்த குடிமக்களுக்கு உதவியாக ஆண்டுதோறும் வழங்கிவரும் 100ரிங்கிட்டை கண்ணாடி போட்டு வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அல்பிரெட் தெரிவித்தார்.கடந்த ஈராண்டுகளாக மாநில அரசு அந்த உதவித்தொகையை வழங்கி வருகிறது.

அம்முதியவருக்கு அவரின் மகன்கூட நிதியுதவி செய்வதில்லை என்பதால் மாநில அரசின் இந்த உதவி அவரை மனமுருக வைத்துவிட்டதாக அல்பிரெட் குறிப்பிட்டார்.

‘பிஎன் எதுவும் கொடுக்கவில்லை’

இன்னொரு பேச்சாளர், ஹருன் டின், கூட்டரசு அரசாங்கத்தின் பந்துவான் ரக்யாட் 1மலேசியா திட்டத்துக்காக குவான் எங்குக்கு நன்றி தெரிவித்தார்.

“குவான் எங் ரிம100கொடுக்கவில்லை என்றால், பிஎன் அரசு மக்களுக்கு ரிம500உதவித்தொகையைக் கொடுத்தே இருக்காது”, என்றவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“குவான் எங் தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.பிஎன்(மாநிலத்தை) ஆண்ட இத்தனை ஆண்டுகளில் எதுவுமே கொடுத்ததில்லை”.

புக்கிட் கெடோங்கைச் சேர்ந்த ஹருன்,66, “உயர்ந்துவரும்” தேசிய கடனை அடைப்பதற்கு பிஎன் தலைவர்கள் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

“அதற்குப் பதில் ஊழல்களுக்குமேல் ஊழல்களில் நமது பணம் பறிபோவது பற்றித்தான் கேள்விப்படுகிறோம்”, என்று முறையிட்டவர் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் திட்டத்தை அதற்கு ஓர் எடுத்தக்காட்டாகக் குறிப்பிட்டார்.

பக்காத்தான் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறும் என்றவர் நம்புகிறார்.

“அன்வார் இப்ராகிமின் மூத்த மகள் நுருல் இஸ்ஸா  என்றாவது ஒரு நாள் முதல் பெண்பிரதமர் ஆவதைக் காண விரும்புகிறேன்”, என்றாரவர்.

அதற்கான தகுதி அவருக்கு உண்டு என்று கூறிய ஹருன்,“அவரின் முன்னேற்றத்தை அணுக்கமாகக் கவனித்து வந்துள்ளேன்”, என்றார்.