பேராக் முப்தி ஹருஸ்ஸானி சக்கரியா, இஸ்ரேலிய யூதர்களுடன் ஒத்துழைப்பது, அவர்கள் ஜயோனிச கொள்கைகளை ஏற்பவர்கள்(Zionist ) அல்லர் என்றாலும்கூட தடுக்கப்பட்ட ஒன்று என்று கூறுகிறார்.
ஏனென்றால் இஸ்ரேலில் உள்ள யூதர்கள் முஸ்லிம்களிடம் விரோதம் கொண்டவர்கள் என்று ஹருஸ்ஸானி கூறியதாக இன்றைய உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
“நபிகள் காலத்தில் யூதர்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நட்புறவு கொள்ளத்தக்கவர்களாக விளங்கினார்கள்.ஆனால், இஸ்ரேலில் உள்ள யூதர்கள் முஸ்லிம்களைப் பகைவர்களாகக் கருதுபவர்கள், முஸ்லிம் நாடு ஒன்றைத் தங்களின் காலனியாக்கிக் கொண்டிருப்பவர்கள்”, என்றவர் அந்நாளேட்டிடம் கூறினார்.
யூதர்களுடன் வணிகம் செய்ய இஸ்லாம் அனுமதிப்பதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் குறிப்பிட்டது குறித்து ஹருஸ்ஸானி கருத்துரைத்தார்.
இதனிடையே,அப்துல் ஹாடி தம் நிலைப்பாட்டை வலியுறுத்தி இன்று மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.அதில் அவர், எல்லா யூதர்களுமே ஜயோனிச கொள்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லர் என்றார்.
“யூதர்களில் ஒரு தரப்பினர் ஜயோனிசம், யூதவியத்தை விட்டு விலகிச் செல்வதாக கருதுபவர்கள்.அதற்காகவே அவர்களில் சிலரை இஸ்ரேலிய அரசு சிறையில் தள்ளியது”, என்றாரவர்.
சில அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக பாஸ் ஜயோனிஸ்டுகளுக்கு எதிரான தனது கொள்கையைத் தளர்த்திக் கொண்டிருக்கிறது என்று கூறுவோரையும் அப்துல் ஹாடி சாடினார்.