என்எப்சி மீதான பிஏசி விசாரணையில் தலைமை நிர்வாகி மௌனமாக இருந்தார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீது நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு நடத்தும் விசாரணையில் சாட்சியமளிக்குமாறு அழைக்கப்பட்ட அந்த நிறுவனப் பேராளர் தமது வாக்குரைஞர்களுடைய ஆலோசனையைத் தொடர்ந்து மௌனம் சாதித்ததார். அதனால் இன்று அந்த விசாரணைக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

“வான் ஸுரினா சாஆரன் அந்த நிறுவனத்தின் மனித வளத் தலைமை நிர்வாகி ஆவார். அவர் இரண்டு வழக்குரைஞர்களுடன் சாட்சியமளிக்க வந்தார். பெரும்பாலும் அந்த வழக்குரைஞர்களே பேசினார்கள். தங்கள் கட்சிக்காரர் மீது பழி ஏற்பட்டு விடும் என அஞ்சுவது அதற்குக் காரணம் என அவர்கள் கூறினர். கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்றும் அவர்கள் வான் ஸுரினாவுக்கு உத்தரவிட்டனர்.,” பிஏசி உறுப்பினருமான கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் கூறினார். அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசினார்.

அதனைத் தொடந்து பாதுகாப்பாகத் தாம் பதில் கூற முடியும் என்ற கேள்விகளைத் தேர்வு செய்யலாம் என பிஏசி பின்னர் தெரிவித்ததாக அப்துல் ரஹ்மான் சொன்னார்.

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி மீதான பிஏசி விசாரணையின் போது சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சான் கொங் சாய்=க்கு அது போன்ற வாய்ப்பு வழங்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

குழுவின் நேரடி அழைப்புக்கு இணங்க தங்களது கட்சிக்காரர் அங்கு வரவில்லை என்றும் வழக்குரைஞர்கள் வாதாடினர். விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சு கேட்டுக் கொண்டதால் அவர் இங்கு வந்துள்ளதாக வழக்குரைஞர்கள் குறிப்பிட்டனர்.

“விசாரணையில் கலந்து கொள்ளுமாறு நேரடியாக பிஏசி-யிடமிருந்து நேரடியாக என்எப்சி-க்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு நாங்கள் இன்னொரு கடிதத்தை எழுதுவோம்,” என்றும் அப்துல் ரஹ்மான் சொன்னார்.

அதனால் தாங்கள் மீண்டும் கூடுவதற்குச் சில காலம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

காலை 9 மணிக்குத் தொடங்கிய பிஏசி கூட்டம் அரை மணி நேரத்தில் முடித்துக் கொள்ளப்பட்டது. அது பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. என்எப்சி-க்கு இன்னொரு அழைப்பை குழு எழுத வேண்டியிருப்பதால் கூட்டம் பின்னர் முடிவு செய்யப்படும் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

TAGS: