பினாங்கு முதல்வரிடம் ஷேக் உசேன் மன்னிப்பு கேட்க வேண்டும்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் ஆற்றிய உரையில் இந்தியர்களை ஓரங்கட்டினார் என்று கூறியதற்காக மாநில அம்னோ இளைஞர் பகுதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சரின் அரசியல் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அம்னோ இளைஞர் தலைவர் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் லிம் அந்நிகழ்வில் ஆற்றிய உரையின் காணொளியை முதலமைச்சர் அலுவலகம் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் என்று ஜைரில் கீர் ஜொகாரி கூறினார்.

லிம் தமதுரையில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு 90விழுக்காடு மலாய்க்காரர்-அல்லாதார் ஆதரவும் 40விழுக்காடு மலாய்க்காரர்  ஆதரவும் தேவை என்றுதான் குறிப்பிட்டார்.

“நாங்கள் வெளியிட்ட அந்த உரையின் எழுத்துப்படிவமும் இந்தியர்கள் பற்றி அவர் குறிப்பிடவில்லை என்று ஷேக் உசேன் கூறியது தவறு என்பதைத்தான் காண்பிக்கிறது”, என ஜைரில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

“உண்மையில், மலாயிலும் சீனத்திலும் ஹொக்கியானிலும் ஆற்றிய உரையில் இந்தியர்களின் ஆதரவு தேவை என்றுதான் லிம் வலியுறுத்தியுள்ளார்.”

ஷேக் உசேன்(வலம்) தம் கூற்றைத் தற்காக்கும் விதமாக அந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்திய நண்பர் ஒருவர், லிம் இந்திய சமூகத்தின் ஆதரவு தேவை என்பதைக் குறிப்பிடவில்லை என்று தம்மிடம் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.

அதன்பின் அவர், உண்மை தெரிய லிம்மின் உரையின் காணொளியை மலேசியாகினியில் பதிவேற்றம் செய்யுமாறு ஜைரியைக் கேட்டுக்கொண்டார்.

அதில் இந்தியர்களின் ஆதரவு தேவை என்று லிம் கூறியிருந்தால், மன்னிப்பு கேட்கவும் தயார் என்று ஷேக் உசேன் கூறினார்,

உரையின் காணொளியைப் பார்த்துவிட்டு முதலமைச்சரிடம் மன்னிப்பு கேட்பேன் என்று ஷேக் உசேன் கூறியிருப்பதால் விரைவில் அதை மலேசியாகினியில் பதிவேற்றம் செய்வதாக ஜைரில் தெரிவித்தார்.(மலேசியாகினியில் காணொளி வெளிவந்துள்ளது)

அதைப் பார்த்த பின்னர் ஷேக் உசேன் மன்னிப்பு கேட்க வேண்டும்.சொன்னபடி செய்யவில்லை  என்றால் மேல்நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்போவதாக அவர் சொன்னார்.

அந்தக் காணொளியைப் பார்த்தாரா என்று  ஷேக் உசேனை வினவியதற்குப் பார்த்ததாகக்  கூறிய அவர் “அக்காணொளியில், அன்வார் இப்ராகிமின் காணொளி பற்றி டிஏபி கூறியதுபோல் ஒட்டுவேலை செய்யப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது”, என்று மலேசியாகினியிடம் கூறினார்.

“நான் மன்னிப்பு கேட்குமுன்னர் காணொளியில் மாற்றம் செய்யப்படவில்லை என்ற தடயவியல் உத்தரவாதத்தை டிஏபி வழங்க வேண்டும்”, என்றாரவர்.

அத்துடன், ஜைரில் முக்கிய விவகாரத்திலிருந்து- டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்எஸ்என். ராயர்(ஸ்ரீ டெலிமா),ஏ.தனசேகரன்(பாகான் டாலாம்) ஆகியோர் விருந்துக்கு வரவில்லை- மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயலக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அம்மூவரும் பினாங்கின் இரண்டாம் துணை முதலமைச்சர் பி.ராமசாமி முறைகேடாக நடந்துகொள்ளவில்லை என்று ஒழுங்குவாரியம் செய்துள்ள முடிவில் அதிருப்தி அடைந்துள்ளதாக பலத்த வதந்தி உலவுகிறது.