ஈப்போ இரண்டு மாவட்ட போலீஸ் தலைமையகங்களைப் பெறும்

ஈப்போ மாநகர்  விரைவில் இரண்டாவது மாவட்ட போலீஸ் தலைமையகத்தைப் பெறவிருக்கிறது. பொது மக்களுக்கு விரைவான மேலும் திறமையான சேவையை வழங்குவது அதன் நோக்கம் என போராக் போலீஸ் தலைவர் சுக்ரி டாஹ்லான் இன்று கூறினார்.

இப்போது ஈப்போவுக்கு ஒரே ஒரு மாவட்டப் போலீஸ் தலைமையகம் மட்டுமே உள்ளது. அது 24 போலீஸ் நிலையங்களைக் கவனித்து வருவதால் அதன் வேலைச் சுமை அதிகமாக இருப்பதாக அவர் சொன்னார்.

புதிய மாவட்ட போலீஸ் தலைமையகத்தை அமைப்பதற்கு வேண்டுகோள் விடுக்கும் கடிதம் புக்கிட் அமானுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 205வது போலீஸ் தினத்தை ஒட்டி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் கொண்டாட்டங்களின் போது முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

“இரண்டு மாவட்ட போலீஸ் தலைமையகங்களைப் பெற்றிருப்பதின் மூலம் நாங்கள் போலீஸ் நிலையங்களின் நிர்வாகத்தை பிரித்துக் கொள்ள முடியும். அதனைத் தொடர்ந்து விரைவான  திறமையான சேவையை வழங்கி ஈப்போவை பாதுகாப்பான நகரமாக வைத்துக் கொள்ள முடியும்,” என சுக்ரி மாதாந்திரக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

நடப்பு மாவட்ட போலீஸ் தலைமையகம் ஈப்போ பாராட் என்றும் புதியது ஈப்போ தீமோர் என்றும் அழைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேராக்கில் 2012ம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் மொத்தம் 1,349 குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டதாக சுக்ரி கூறினார். அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு அதே காலத்தில் பதிவான 1,668 குற்றங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும் என்றார் அவர்.

பெர்னாமா