இந்தியப் பிரதமரும் அமைச்சர்களும் தங்கள் சொத்துக்களை அறிவித்தனர்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது 30 அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சொத்துக்களை இன்று அறிவித்துள்ளனர்.

மன்மோகனுடைய தனிப்பட்ட சொத்து மதிப்பு 5.1 கோடி ரூபாய் (3.9 மில்லியன் ரிங்கிட்) ஆகும். அதில் வங்கியில் உள்ள ரொக்கமும் நிலமும் சொத்துக்களும் அடங்கும் ( இரண்டு வீடுகள், 800 சிசி மாருதி கார்)

அந்த விவரங்கள் இந்தியப் பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சர்களில் பெரிய செல்வந்தர், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் கமல் நாத் ஆவார். அவரது சொத்து மதிப்பு ( குடும்பத்தினருக்கு சொந்தமானது உட்பட) 263 கோடி ரூபாய் (165 மில்லியன் ரிங்கிட்) ஆகும்.

அமைச்சர்களில் மிகவும் ஏழையாக உள்ளவர் கேரளாவைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சரான ஏகே அந்தோனி ஆவார். அவருக்கு ஒரு கோடி ரூபாய் (666,000 ரிங்கிட்) மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே உள்ளன.

அமைச்சர்களுக்கான நன்னடத்தை நெறிமுறைகளின் கீழ் தங்கள் சொத்துக்களை அமைச்சர்கள் அறிவித்துள்ளதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் கூறியது.

என்றாலும் இன்னும் எல்லா அமைச்சர்களும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவில்லை.

இந்தியாவை ஆளும் கட்சி நம்பிக்கை நெருக்கடியை எதிர்நோக்கும் வேளையில் அரசாங்கத்தின் வெளிப்படையான போக்கை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமைச்சர்களுடைய சொத்து விவரங்கள் வெளியிடப்படுகின்றன.

அண்மைய காலமாக காமன்வெல்த் போட்டி ஊழல்கள், தொலைத் தொடர்பு ஊழல்கள் போன்ற பல பெரிய ஊழல்களினால் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் கடும் நெருக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

பெர்னாமா