“இஸ்லாம் யூதர்களுக்கு எதிரானது அல்ல”

இஸ்ரேலிய யூதர்கள் யூத இனவாத சித்தாந்தத்துடன் தங்களை பிணைத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவர்களுடன் ஒத்துழைப்பதற்கு பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் முஸ்லிம்களுடன் யூதர்களுடன் இணைந்து பணியாற்றலாமா என்ற விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது

பேராக் முப்தியின் கருத்துக்கு மாற்றுக் கருத்தைத் தெரிவித்த முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின், இஸ்லாம் யூதர்களுக்கு எதிரானது அல்ல என்பதைச் சுட்டிக் காட்டினார். இஸ்லாம் அனைத்து இனங்களையும் மதிக்கும் சமயம் என்றும் இன வம்சாவளி அடிப்படையில் எந்த தனிநபரையும் அது தண்டிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.

“இஸ்லாத்தைத் தழுவுமாறு இஸ்லாம் மக்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. வேற்று சமயத்தைச் சார்ந்தவர் என்பதால் யாருடனும் சண்டை போடுவதும் இல்லை,” என அவர் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆகவே யூதர்கள் அவர்களுடைய இன வம்சாவளி அல்லது சமயம் காரணமாக தண்டிக்கப்படக் கூடாது. வரலாற்றில் யூத சமூகத்துக்கும் முகமது நபிக்கும் இடையிலான பகைமைக்கு யூதசமூகம் இஸ்லாம் மீது காட்டிய எதிர்ப்புணர்வே காரணமாகும். இன வம்சாவளி காரணமல்ல.”

முகமது நபிக்கு சாஃபியா ஹுயாய் என்ற பெயருடைய யூத மனைவி ஒருவர் இருந்தார். அப்துல்லா சலாம் என்ற யூத நண்பரும் அவருக்கு இருந்தார். பொருட்களை யூதர்களிடம் அவர் அடகு வைத்தார். நோய் வாய்ப்பட்டுள்ள யூதர்களையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறி வந்துள்ளார்.”

“நட்புறவு அடிப்படையில் நாம் யூதர்களிடம் நன்றாக இருக்கலாம் என்பதையே அது காட்டுகிறது. அது இஸ்லாத்துக்கோ அல்லது போதனைகளுக்கோ துரோகம் செய்யவில்லை,” என செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அறிஞரான அஸ்ரி சொன்னார்.

“எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குர் ஆனில் உள்ள Surah al-Maidah   யூத, கிறிஸ்துவ பெண்களை மணந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கிறது. அது Ahlul Kitab என வகைப்படுத்தப்பட்டுள்ளது.”

அஸ்ரி அத்துடன் Surah al-Mumtahah, 8-9-ஐயும் மேற்கோள் காட்டினார். அதன் மொழியாக்கம் இவ்வாறு கூறுகிறது: “சமயம் காரணமாக உங்களுடன் சண்டை போடாத, உங்களை உங்கள் வீடுகளிலிருந்து விரட்டாத மக்களிடம் நீங்கள் சரியாக நடந்து கொள்வதையும் அவர்கள் மீது நியாயமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. உண்மையில் நியாயமாக நடந்து கொள்கின்றவர்களை அல்லாஹ் நேசிக்கிறார்.”

“”சமயம் காரணமாக உங்களுடன் சண்டை போடுகின்ற, உங்களை உங்கள் வீடுகளிலிருந்து விரட்டுகின்ற அல்லது உங்களை விரட்டுவதற்கு உதவுகின்ற மக்களுடன் தொடர்பு கொள்வதையே அல்லாஹ் தடுக்கிறார்- அவர்களுடன் நீங்கள் நட்புறவு கொள்ளக் கூடாது என அல்லாஹ் தடுக்கிறார். அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் யாரும் தவறு செய்கின்றவர்கள் ஆவர்.”

முஸ்லிம்கள் வேற்று சமயங்களைச் சார்ந்த மக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு அது அடிப்படையாக அமைந்துள்ளது என்று அஸ்ரி தமது அறிக்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

யூதர்களுடன் ஒத்துழைப்பதை குறிப்பாக வர்த்தகத்தில் ஒத்துழைப்பதை பாஸ் கட்சி அனுமதிப்பதாகவும் ஆனால் யூத இனவாதத்தை நிராகரிப்பதாகவும் அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்த பின்னர் அந்த விவகாரம் தலை தூக்கியது.

இஸ்ரேலில் உள்ள யூதர்கள் முஸ்லிம்களை தங்கள் எதிரிகளாகக் கருதுவதாலும் முஸ்லிம் நாடு ஒன்றை ஆக்கிரமித்திருப்பதாலும் அவர்கள் kafir harbi ( இஸ்லாத்துக்கு எதிராக போர் தொடுத்துள்ள நம்பிக்கையற்றவர்கள்) என ஹாருஸ்ஸானி பின்னர் கூறினார்.