பெர்னாமா தொலைக்காட்சி படப்பிடிப்பாளர் நோராம்பைசுல் முகமட் நோரைக் கொன்று, டிவி 3 நிருபருக்கு காயத்தை ஏற்படுத்திய துப்பாக்கிக் குண்டுகள் ஆப்பிரிக்க ஒன்றியத் துருப்புக்கள் சுட்டவையாகும். இவ்வாறு மேற்கத்திய ஆப்பிரிக்க செய்தி நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
“இந்த வேளையில் உண்மை நிலவரங்கள் தெளிவாக தெரியவில்லை. சூழ்நிலை குறித்து நான் சோமாலிய அதிபருடன் பேசியுள்ளேன். முழு விசாரணை நடத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன். நியாயமற்ற முறையில் நடந்து கொண்டதாக கண்டு பிடிக்கப்படும் எந்த வீரர் மீதும் சரியான நடவடிக்கை எடுக்கப்படும்,” என ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரட் முஹிஷா கூறினார்.
சோமாலியாவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்ற வாதங்கள் தொடரும் வேளையில் மலேசிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகளில் அந்தத் தகவல் இடம் பெறவில்லை.
அந்த விஷயம் பற்றித் தாம் சோமாலியா அரசாங்கத்துடன் பேசியிருப்பதாகவும் அந்தச் சம்பவம் பற்றிய விசாரணை முடிந்ததும் முழு அறிக்கை வழங்க சோமாலியா அதிபர் ஷேக் ஷரீப் ஷேக் அகமட் வாக்குறுதி கொடுத்திருப்பதாகவும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளும் கொல்லப்பட்டவருடைய குடும்பமும் அரசு சாரா அமைப்புக்களும் நோராம்பைசுல் இடம் பெற்றிருந்த உதவிக் குழுவை ஏற்பாடு செய்த- அம்னோ இளைஞர் பிரிவு ஆதரவு பெற்ற- புத்ரா ஒரே மலேசியா மன்றத்தைக் சாடியுள்ளன.
தங்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும் சண்டைப் பகுதிகளில் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்பது மீது பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும் அந்தக் குழுவுடன் சென்ற பத்திரிக்கையாளர்கள் கூறினார்.
ஆனால் அத்தகைய அபாயங்கள் நிருபர்களுக்கு வழக்கமானவை என்றும் தீவிரமான பயிற்சிகளும் ஏற்பாடுகளும் துப்பாக்கி துளைக்காத கவசங்களும் கூட அவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என நஜிப் சொன்னார்.
“அது அவர்கள் தொழிலில் ஒர் அங்கமாகும். நீங்கள் பத்திரிக்கையாளராக விரும்பவில்லை என்றால் வீட்டில் இருக்க வேண்டும்,” என அவர் சொன்னார்.
நேரில் பார்த்தவர்கள் சொன்னது
கூலிக்கு அமர்த்தப்பட்ட தனிப்பட்ட குடிப்படையினருடன் நோராம்பைசுலும் டிவி 3 படப் பிடிப்பாளர்
அஜி சாரேஹார் மஸ்லானும் பயணம் செய்து கொண்டிருந்த காரை ஆப்பிரிக்க ஒன்றிய அமைதிப் படையினர் வாகனம் ஒன்றில் பின் தொடர்ந்ததாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
நோராம்பைசுல் மார்புப் பகுதியில் சூடுபட்ட வேளையில் அஜி சாரேஹாருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது.
“அந்தக் காருக்கு பின்னால் வந்த ஆப்பிரிக்க ஒன்றிய வாகனம் சுடத் தொடங்கியதாக ஹலிமா என்று மட்டும் தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட மாது ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
சோமாலியா தலைநகர் மொஹாடிசுவில் பல குடிப்படைகள் இயங்குகின்றன. அவற்றில் கட்டுக்கோப்பு இல்லாத ஆயிரக்கணக்கான பேர் ஆயுதங்களை வைத்துக் கொண்டு உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் இயங்காததால் நெரிசல் ஏற்படும் சாலைச் சந்திப்புக்களில் துருப்புக்கள் சுடுவது வழக்கமான நிகழ்வாகும்.
அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் “எதிர்பாராமல்” நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு என நஜிப் குறிப்பிட்டுள்ளார். அது மலேசியப் பத்திரிக்கையாளர்களை குறி வைத்து நடத்தப்படவில்லை என அவர் சொன்னார். சோமாலியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே காரணம் என அவர் கருதுகிறார்.
போட்டி குடிப்படையினருக்கு இடையில் அடிக்கடி மோதல் நிகழும் அந்த நாட்டில் பயிற்சி பெறாதவர்களிடம் பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்கள் குவிந்துள்ளன.