EC: அது மோசடி அல்ல, சட்டப்பூர்வமான “இல்லாத வாக்காளர்” பதிவு

நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ள தேர்தல் மோசடி எனக் கூறப்படும் விசயம், உண்மையில் சாதாரண வாக்காளர் ஒருவர்  ‘இல்லாத வாக்காளர்’ எனப் பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்துக் கொண்டதாகும் என தேர்தல் ஆணையம் (EC) விளக்கியுள்ளது.

தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத தேர்தல் ஆணைய முது நிலை அதிகாரி ஒருவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

அந்த ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சோதனை செய்த போது ஸாரினா அபு தாவ்சி என்ற அந்த வாக்காளர் தேர்தல் வாக்காளர் பட்டியலில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

ஸாரினா ஏற்கனவே பெரிய வாக்காளர் பட்டியலில் சாதாரண வாக்காளராக இருந்தார் என்றும் அவர் தமது கணவர் ஆயுதப்படைகளில் வேலை செய்வதால் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் ‘இல்லாத வாக்காளர்’ எனப் ( absentee voter ) பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்தார் என்றும் அவர் சொன்னார்.

“அவர் புதிய பதிவாக பதிவு செய்யப்பட்டார். காரணம் இல்லாத வாக்காளர் என பதிவு பெறுவதற்கு அவர் சமர்பித்த முதல் விண்ணப்பம் அதுவாகும். அவரது விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் போது  அவருடைய முந்திய பதிவு மாற்றப்பட்டு அவர் இல்லாத வாக்காளர் என பதிவு செய்யப்படுவார்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“ஸாரினாவுக்கு இப்போது இரண்டு பதிவுகள் இருப்பதற்கு பொது மக்கள் பார்வையிடக் கூடிய EC இணையத் தளத்தில் உள்ள புள்ளிவிவரக் களஞ்சியம் தற்போது தான் புதுப்பிக்கப்படுவது  காரணமாகும்.

அத்துடன் கடந்த ஆண்டு நான்காவது கால் பகுதிக்கான வாக்காளர் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடையாளக் கார்டின் முடிவில் காணப்படும்  ‘/’ குறியீடு, அந்த வாக்காளர் இரண்டு முறை பதிவு செய்துள்ளார் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் அந்த EC அதிகாரி சொன்னார்.

தற்போது பரிசீலிக்கப்படும் பதிவுகளில்  அந்தக் குறியீடுகள் எதுவும் இருந்தால் பழைய அடையாளக் கார்டையும் புதிய அடையாளக் கார்டையும் பிரித்துக் காட்டுவதற்காக அவை போடப்பட்டுள்ளன.

“அது ஒரு நபர் இரண்டு வெவ்வேறு தகுதிகளை பெற்றிருப்பதாகும். இணையத் தளத்தில் உள்ள புள்ளி விவரக் களஞ்சியம் புதுப்பிக்கப்படும் போது அதே நபருக்கு ஒரே ஒரு தகுதி மட்டுமே இருக்கும்,” என்றா அவர்.

பெக்கான் தொகுதி

EC சார்பில் அதிகாரத்துவ அறிக்கைகளை வெளியிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முது நிலை அதிகாரி தெரிவித்தார்.

என்றாலும் EC தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்பும் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரும் அந்த அதிகாரியின் பதிலுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

அந்த விவகாரம் மீது அப்துல் அஜிஸுடனும் வான் அகமட்டுடனும் தொடர்பு கொள்ளப்பட்டது. ஆனால் கருத்துத் தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

இன்று காலை வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் ‘மாபெரும் மோசடி, தில்லுமுல்லு வேலைககள்’ எனத் தாம்  கூறிக் கொண்ட விஷயங்களை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தினா .

அன்வார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

பின்னர் அவர், பூலாயில் ஏற்கனவே வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட ஒருவர்  இப்போது பெக்கானில் புதிய வேட்பாளராக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் அச்சிட்ட தாள் ஒன்றைச் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

“ஒரே மாதிரியான விவரங்களை உள்ளீடு செய்தால் கணினி புறந்தள்ளி இருக்கும். அதனால்,புதிதாக பதிவுசெய்யும்போது அடையாள அட்டை எண்களுக்குப் பின்னர் ஒரு சாய்வுக்கோடு (/)  போட்டு விடுகிறார்கள்”. கோட்டைப் பார்த்து அதை ஒரு புதிய பெயர் என்று கணினி தீர்மானித்து விடுகிறது.

இப்படி EC, அம்னோவுடன் உள்கூட்டு வைத்துக்கொண்டு ஒருவரையே பல தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்து வருகிறது என்றவர் கூறினார்.

மோசடி எனக் கூறப்படும் அந்த விஷயம் எந்த அளவுக்கு பரவலாக உள்ளது என அன்வார் சொல்லவில்லை என்றாலும் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக  சொன்னார்.

“அது உத்தரவின் பேரில் செய்யப்படுகிறது என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அம்னோவுக்கு அது தெரியும். மலாய்க்காரர்களைப் பாதுகாக்கும் கடமை EC-க்கு உண்டு என அவை சொல்லும் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்,” என்றும் அன்வார் கூறிக் கொண்டார்.

TAGS: