யூத அமைப்புக்களுடன் அவை யூத இனவாதத்தை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் அவற்றுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.
யூத மக்களுடன் வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து இன்றைய சூழ்நிலை வேறுபட்டுள்ளதே அதற்குக் காரணம் என நஸ்ருதின் தெரிவித்தார்.
நஸ்ருதின் அறிக்கை, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக அமைந்துள்ளது என மலாய் நாளேடான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
யூத சமூகம், யூத இனவாதத்தை வலியுறுத்தாத வரையில் அதனுடன் வர்த்தகம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அப்துல் ஹாடியும் நிக் அப்துல் அஜிஸும் கூறியிருந்தனர்.
“யூதர்களுடன் எல்லா வகையான வர்த்தகத்திலும் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள பாத்வா உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டது,” என நஸ்ருதின் அறிக்கை குறிப்பிட்டது.
“எந்த வகையான வர்த்தகத்தின் மூலம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு ரிங்கிட்டும் அல்லது டாலரும் பாலஸ்தீன முஸ்லிம்களுடைய இருதயங்களை துளைக்கும் துப்பாக்கி ரவைகளுக்கு பணம் செலுத்துவதில் போய் முடிவதே அதற்குக் காரணம்.”
அவர்கள் யூதர்களாகப் பிறந்த காரணத்துக்காக அந்த இனத்துக்கு எதிராக பாத்வா விதிக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் இழைக்கும் குற்றங்களுக்காகவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் நஸ்ருதின் மேலும் கூறினார்.