சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் டாக்டர் ஹலிமா அலியும் தங்களது அலுவலகங்களை அதிகச் செலவில் புதுப்பித்துக் கொண்டதாக தங்களது முன்னாள் சகா ஹசான் அலி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
2008ம் ஆண்டு கல்வி, உயர் கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் தாம் தமது அலுவலகத்தைப் புதுப்பிக்கவே இல்லை என ஹலிமா சொன்னார்.
ஷா அலாமில் மாநிலச் சட்டமன்றத்தில் நிருபர்கள் அவரை அணுகிய போது “இல்லை, இல்லை” எனப் பதில் அளித்தார்.
ஹசானுடைய குற்றச்சாட்டு பற்றி சொன்ன போது சேவியர் வாய் விட்டு சிரித்தே விட்டார்.
“நான் உங்கள் அனைவரும் என் அலுவலகத்தைப் பார்க்க அழைத்துச் செல்கிறேன். நீங்கள் என் அலுவலகத்தை ஹசான் அலுவலகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.”
சேவியர் சுகாதாரம், தோட்டத் தொழிலாளர்கள், வறுமை ஒழிப்பு, கருணை அரசு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறார்.
2009ம் ஆண்டு தொடக்கத்தில் தமது அலுவலகத்துக்குப் புதிய கம்பளம் போடப்பட்டது. இரண்டு கூட்ட அறைகள் பிரிக்கப்பட்டன. அவற்றுக்கு மொத்தம் 100,000 ரிங்கிட் செலவானது என்றார் அவர்.
“அந்தக் குற்றச்சாட்டு குறும்புத்தனமானது. முற்றாகப் பொய். அவர் காரணங்களைத் தேடுகிறார். நாளை நான் விவரங்களை அறிவிப்பேன்,” எனக் கூறிய அவர் செலவுகளைக் குறைப்பதற்காக மற்ற மாநில அரசுக் கட்டிடங்களிலிருந்து எடுக்கப்பட்ட குளிர் சாதனக் கருவிகள் கூட தமது அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ளன,” என்றும் சேவியர் குறிப்பிட்டார்.