ஹிண்ட்ராப் மேற்கொள்ளும் சிறந்த SPM மாணவர் கணக்கெடுப்பு

2000-ஆவது ஆண்டில், 21  ஆம்  நூற்றாண்டு சவால்களுக்கு நிகர் கொடுக்க, புத்தம் புது சீருடைகளை அணிந்து , முதுகில் புத்தக பை சுமந்து , துவக்க பள்ளிகளில் தங்களின் 11 ஆண்டு கல்வி பயணத்தை தொடர்ந்த மலேசிய மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வெழுதி அவர்களின் முடிவுகளும் தெரிவிக்கப் பட்டுவிட்டன.

சிறப்பான தேர்வுகளை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள்.

ஆனால் சிறந்த தேர்ச்சி பெற்ற  இந்திய மாணவர்களோ அவர்களின்  பெற்றோர்களோ முழுதாய் மகிழ்ச்சி அடைவதற்கு நேர்மாறாக, மறுகணமே உயர் கல்வி வாய்ப்பு கிட்டுமோ கிட்டாதோ என்ற கவலையில்  ஆழ்ந்துவிடுவதை நாம் ஆண்டுதோறும் கண்டும், கேட்டும், படித்தும் வருகிறோம்.

இந்நிலை மாறவேண்டும் என்றுதான் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. தேர்ச்சி அடைந்த இந்திய மாணவர்களுக்கு மாத்திரமல்ல அணைத்து இன, மத மாணவர்களுக்கும் அவரவரின் கல்வி தேர்சிக்கேற்ப உயர் கல்வி வாய்ப்புகள் சரி சமமாக வழங்கபடுவதே தர்மமுமாகும்.

எஸ்.பி.எம் தேர்வில்   5 A-க்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் படிப்பை தொடர வாய்பளிக்க வேண்டும் என்பது ஹிண்ட்ராபின் கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கையை மேலும் வலு பெற செய்யும் நோக்கில் நாட்டிலுள்ள 5 A-க்களுக்கும் மேலான தேர்வு முடிவுகளை பெற்ற  இந்திய மாணவர்களின்  எண்ணிகையை அறிய ஹிண்ட்ராப் முற்ப்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் எஸ்.பி.எம்  தேர்வில் 5 A-க்களுக்கும் மேலான சிறப்பான தேர்ச்சி பெற்ற மொத்த இந்திய மாணவர்களின் எண்ணிகையை யாரும் பெற்றிருக்கவில்லை. இதனால் எத்தனை மாணவர்களின் எதிர்காலம் பாழாகிறது என்ற விபரமும் யாருக்கும் தெரிவதில்லை.

இந்த விபரங்களை ஒன்று திரட்டுவத்தின் வழி தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களில் எத்தனை இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு  மறுக்கப்படுகிறது என்ற உண்மையை  புலப்படுத்தி  அவர்களின் உயர் கல்வி உரிமைக்கு குரல் கொடுக்க ஹிண்ட்ராப் எண்ணம் கொண்டுள்ளது.

எனவே கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய இந்திய மாணவர்கள் , அவர்களின் பெற்றோர்கள், உடன் பிறப்புகள் , நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள், உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இம்முயற்சிக்கு உதவ முன்வருமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

இம்முயற்சியை மலேசிய இந்தியர்களின் மத்தியில் பிரபலபடுத்தும் நோக்கில்  http://hindraf.org/spm-results-2011.html என்ற இணைப்பை   (link)  வாசகர்கள் தங்களின் முகநூல் (facebook), டிவிட்டர் (twitter) அகப்பக்கங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் நம் இளம் மாணவர்களின் கல்வி உரிமைக்காக , ஒரு சமுதாய பணியாக எண்ணி  தெரிவிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

www.hindraf.org எனும் அகப்பக்கத்தில் உள்ள “SPM Resultsl 2011” எனும் மிக எளிமையான பாரத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது பாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்ணிற்கு தொலைநகல் (fax) மூலமோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கல்வி என்பது தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். இந்தியனாய் பிறந்துவிட்ட காரணத்தால் அது மறுக்கபடுவது அநியாயம். ஏதோ சில அதிஷ்டசாலி மாணவர்களுக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக  வழங்கப்படும் உயர்கல்வி வாய்ப்புகளை பெரிதாய் விளம்பரம் செய்து அரசியல் ஆதாயம் தேடும் படலங்கள்  இன்னும் சில நாட்களில் இந்தியர்களை கொண்டே அரங்கேற்றம் காணும். இது தேர்தல் பருவம் என்பதால் வழக்கத்தைவிட மெருகூட்டப்பட்ட  காட்சிகளை இம்முறை  தயாரித்து மேடையேற்றுவார்கள்.

இப்படிப்பட்ட விளம்பர நாடகங்களின் மூலம் பலனடையும் ஒரு சில மாணவர்களை கண்டு ஆனந்தமடைந்து மனநிறைவு கொண்டுவிடாமல், ஆயிரக்கணக்கில்  வாய்ப்பு மறுக்கப்பட்டு  தனிமையில் வெதும்பி, கண்ணீரால்  எதிகால கனவுகளை   கரைத்துக்கொண்டிருக்கும்  மாணவர்களையும், பிள்ளைகளை எப்படி கரை சேர்க்கபோகிறோம் என்று பதறும்  பெற்றோர்களுகளின் கவலைகளையும் ஆண்டுதோறும் நாம் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்து  தொடர்ந்து ஏமாறுவது  போதும். நாம் ஏமாறும் வரை ஏமாற்றுபவர்கள்  ஏமாற்றிக்கொண்டுதானிருப்பார்கள்!!!

இந்திய மாணவர்களின் உயர்கல்வி உரிமை எந்த அரசியல் வாதியிடமோ, அரசியல் கட்சிகளிடமோ இல்லை அது ஒவ்வொரு மலேசிய  இந்தியனிடமும்தான்  உள்ளது !!

தர்மத்திற்கு நேர்மையாய் குரல் கொடுப்போம்.

நன்றி,
வி.சம்புலிங்கம்
தேசிய ஒருங்கிணைப்பாளர்
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.

TAGS: