சிலாங்கூர் கல்வித் துறை அதிகாரி: வாக்காளர் பதிவு மீது குறிப்பு அனுப்பியது உண்மையே

“ஆசிரியர்களுடைய வாக்காளர் பதிவு நிலை” குறித்து தகவல் கொடுக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு குறிப்பு ஒன்றை சிலாங்கூர் கல்வித் துறை அனுப்பியுள்ளது உண்மையே. அது கல்வி அமைச்சு அனுப்பிய உத்தரவுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அந்தத் துறையைச் சார்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

கல்வி அமைச்சிடமிருந்து அதற்கான உத்தரவு வந்ததாக அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஆனால் கல்வி அமைச்சிடமிருந்து உத்தரவு வந்ததாக கூறப்படுவதை கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் இதற்கு முன்னர் மறுத்துள்ளார்.

“ஆசிரியர்களுடைய அரசியல் ஈடுபாடு பற்றி விசாரிக்குமாறு கல்வித் துறைகளுக்கு கல்வி அமைச்சு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை,” என வீ சொன்னார்.

“வாக்களிப்பு இரகசியமானது. தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை ஆசிரியர்கள் உங்களிடம் சொல்வார்கள் என நீங்கள் நினைக்கின்றீர்களா ? முட்டாளாக இருக்க வேண்டாம்,” என்றார் அவர்.

அந்தக் குறிப்பு பற்றி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செர்டாங் எம்பி தியோ நீ சிங் நிருபர்களிடம் தகவல் வெளியிட்டார்.

சிலாங்கூரில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள அந்தக் குறிப்பில் மாநிலக்  கல்வித் துறையின் கல்வி நிர்வாகப் பிரிவுத் தலைவர் ஹாஸ்னுல் ஹாடி அப்துல்லா கையெழுத்திட்டுள்ளார்.

மார்ச் 22ம் தேதியிடப்பட்ட அந்தக் குறிப்புடன் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உள்ள ஆசிரியர் எண்ணிக்கை, எத்தனை பேர் வாக்காளர்களாகப் பதிந்து கொண்டிருக்கின்றனர், அவர்களுடைய சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகள் யாவை என்ற விவரங்களை அதிகாரிகள் பதிவு செய்வதற்கான பாரமும் இணைக்கப்பட்டுள்ளது.

வீ மறுப்பு தெரிவித்துள்ளது பற்றி வினவப்பட்ட போது “அது இயல்பானது. அது தான் அரசியல்,” என அந்த அதிகாரி பதில் அளித்தார்.

அந்த விவகாரம் “நிர்வாகக் கூட்டத்தில்” பேசப்பட்டதாகக் கூறிய அவர், அதில் எந்த முதுநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்ற கேள்விக்கு பதில் தர மறுத்து விட்டார். அதனைச் சொல்வது தமது அடையாளத்தை அம்பலமாக்கி விடும் என்றார் அவர்.

‘ஆசிரியர்களை அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல’

ஆசிரியர்களுடைய சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளை ஆய்வு செய்யும் நோக்கத்தை அந்தக் குறிப்பு கொண்டுள்ளதாக கூறப்படுவதை அந்த அதிகாரி மறுத்தார்.

ஆசிரியர்கள் வாக்காளர்களாக பதிந்து கொண்டுள்ளனரா என்பதை பள்ளிக்கூடத் தலைமையாசிரியர்கள் உறுதி செய்து, அவர்களை வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள ஊக்குவிப்பதே அதன் நோக்கம் என அவர் விளக்கினார்.

ஆசிரியர்களுடைய வாக்களிப்பு  விருப்பத்தை அரசாங்கம் கண்காணிக்கும் என அவர்களை மிரட்டுவதற்காக அந்த பாரம் வெளியிடப்பட்டதாக கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.

வாக்களிக்க பதிவு செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக அது அனுப்பப்பட்டது. “எங்களுக்கு அச்சுறுத்தும் எண்ணம் கிடையாது” என வலியுறுத்திய அவர், அவர்களுடைய வாக்களிப்பு விருப்பம் எங்களுக்குத் தெரிந்தாலும் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,” என்றார்.

வாக்காளர்களாக ஆசிரியர்கள் பதிந்து கொள்ளாத பிரச்னை மிக கடுமையாக இருப்பதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள 100 ஆசிரியர்களில் 20 பேர் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.