FGVH என்ற Felda Global Ventures Holdings நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு ஆதரவு அளிக்கும் சத்தியப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டால் எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தங்களுக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுக்க நேரிடும் என அனாக் என்னும் அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் பெல்டா குடியேற்றக்காரர்களை எச்சரித்தார்.
மஸ்லான் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் பேசினார்.
“நீல நிற பாரம் என அழைக்கப்படும் அந்த பாரத்தில் FGVH-ஐ பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்வதை ஆதரிப்பதாக கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்களும் அல்லது அவர்கள் நிலத்தை பெறவிருக்கின்ற வாரிசுகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.”
“அந்தப் பாரத்தின் இரண்டாம் பக்கத்தில் உள்ள ஐந்தாவது பத்தி கவலையைத் தருகிறது- அந்தப் பாரத்தில் கையெழுத்திடுகின்றவருடைய சத்தியப் பிரமாணம் இது என்றும் அவ்வாறு கையெழுத்திடுவதின் மூலம் எதிர்காலத்தில் பெல்டாவுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் அவர் எடுக்க மாட்டார் என்றும் அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,” என மஸ்லான் தெரிவித்தார்.