FGVH பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து பிரதமர் அலுவலகம் முன்பு 200 பேர் கூடினர்

FGVH என்ற Felda Global Ventures Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்து இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு 200 பேர் ஊர்வலமாகச் சென்றனர்.

அந்த அலுவலகத்திற்கு 500 மீட்டர் தொலைவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் அந்த 200 பேரும் ஊர்வலத்தைத் தொடங்கினர்.

FGVH ஐ பங்குப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை எதிர்க்கும் மக்களுடைய கையெழுத்துக்களைக் கொண்ட 40க்கும் மேற்பட்ட துண்டுத் துணிகள் இணைக்கப்பட்ட இரண்டு பெரிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

பெல்டா அனாக் அமைப்பின் தலைவர் மஸ்லான் அலிமான் தலைமையில் சென்ற அந்தக் குழு பிரதமர் அலுவலகத்தைச் சென்றடைந்ததும் இன்னொரு நுழைவாயிலுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து எழுவர் கொண்ட குழு ஆட்சேபக் குறிப்பை சமர்பிக்க அனுமதிக்கப்பட்டது.

பேராக் இளவரசர் ராஜா அஸ்மான் ஷாவின் நல்லடக்கச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவசரமாகப் புறப்பட்டுச் சென்று விட்டதால் அவரது சார்பில் பேராளர் ஒருவர் ஆட்சேபக் குறிப்பை ஏற்றுக் கொண்டதாக மஸ்லான் பின்னர் தெரிவித்தார்.

TAGS: