இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்துகிறார்

1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது விடுபட்டுள்ள மின்னியல் ஊடகங்களைக் கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் கொண்டுள்ள நோக்கத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.

“தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு நடப்பிலுள்ள சட்டங்களைப் போன்று புதிய சட்டம் ஏதும் தேவையா என்பதை அரசாங்கம் விரிவாக ஆய்வு செய்யும்.”

“அச்சு ஊடகங்கள், இலக்கவியல் ஊடகங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட விதிமுறைகளில் இரண்டு வகையான தரங்களை அரசாங்கம் பின்பற்றுவதாகக் கருதப்படக் கூடாது,” என அவர் நேற்றிரவு கோலாலம்பூரில் ஊடக விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வில் கூறினார்.

பத்திரிக்கையாளர்களுக்கான நன்னெறிக் கோட்பாட்டை தயாரிக்க முக்கிய ஊடகங்கள் சுயமாக முடிவு செய்துள்ளதை அரசாங்கம் வரவேற்பதாகவும் அதனை அரசாங்கம் ஆதரிக்கும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

சுய கட்டுப்பாட்டுக்கும் பத்திரிக்கையாளர்களுடைய இதழியல் நிபுணத்துவத்தை வலுப்படுத்தவும் பத்திரிக்கை மன்றத்தை அமைக்க முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள் எடுத்துள்ள முயற்சியின் ஒரு பகுதியாக அந்தக் கோட்பாடுகள் அமைவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

“அந்த ஒத்துழைப்பின் கீழ் தகவல்களை வெளியிடுவதிலும் சேகரிப்பதிலும் வழிகாட்டிகளாக விளங்கும் விரிவான நன்னெறிக் கோட்பாட்டை தயாரிக்க ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.”

“நடைமுறைக்கு ஏற்ற பயன்படுத்துவதற்குப் பொருத்தமான நன்னெறிக் கோட்பாட்டை உருவாக்கும் பொறுப்பை நான் ஆசிரியர்களிடம் விட்டு விடுகிறேன்.”

இதழியல் தொழில் நடைமுறைகளில் சுய கட்டுப்பாட்டை கொண்டு வருவது அந்தத் தொழில் துறையைச் சார்ந்ததாகும். அரசாங்கம் அதில் தலையிடாது என்றார் பிரதமர்.

ஏற்கனவே அரசாங்கக் கண்காணிப்பில் ஊடக ஆலோசனை மன்றத்தை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு- அது இன்னொரு ஊடகக் கட்டுப்பாட்டு நிலையை உருவாக்கும் என்ற அச்சத்தால்-  கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

ஊடகங்களுக்குக் கூடுதல் சுதந்திரத்தை வழங்குவதாக தாம் அளித்த வாக்குறுதி பற்றியும் நஜிப் பேசினார். ஆண்டுதோறும் வெளியீட்டு அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதிமுறையை ரத்துச் செய்து விட்டு ஒரு முறை அங்கீகாரம் பெற்றால் போதும் என்ற வகையில் அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டம் திருத்தம் நாடாளுமன்றத்தில் இந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றார் அவர்.

TAGS: