ஊடகப் படப் பிடிப்பாளர் ஒருவர் மரணமடைந்த- சோமாலியாவுக்கான உதவி பயணத்தை ஏற்பாடு செய்த புத்ரா ஒரே மலேசியா மன்றம், போரினால் சீரழிந்திருக்கும் அந்த நாட்டுக்கு மேற்கொள்ளும் அடுத்த உதவிப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு தனது “எதிர்ப்பாளர்களுக்கு” அழைப்பு விடுத்துள்ளது.
பெர்னாமா தொலைக்காட்சியின் ஹலோ மலேசியா நிகழ்ச்சி பேட்டி அளித்த அந்த மன்றத் தலைவர் அப்துல் அஜிஸ் அப்துல் ரஹிம் அவ்வாறு அழைப்பு விடுத்தார்.
மலேசியாகினி, மலேசியா இன்சைடர் போன்ற செய்தி இணையத் தளங்கள் உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோரை அழைத்துச் செல்வதற்கான செலவுகளை மன்றம் ஏற்றுக் கொள்ளத் தயார் என அவர் சொன்னார்.
“நான் டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, எல்லா எதிர்க்கட்சித் தலைவர்கள், மலேசியாகினி, மலேசியா இன்சைடர் ஆகியோரை இலவசமாக எங்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு நான் அழைக்கிறேன்.”
“மலேசியாகினியும் மலேசியா இன்சைடரும் அங்குள்ள நிலமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
“என்னைச் சாட விரும்பும் அனைவரையும் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நாம் செல்வோம். நீங்கள் எந்த வேலையும் செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்ததை எழுதுங்கள்,” என்றார் அவர்.
அரசு சாரா அமைப்பான புத்ரா ஒரே மலேசியா மன்றத்தின் சிறந்த பணிகளை குறை கூறுகின்றவர்கள், உண்மையில் அதன் சாதனைகள் காரணமாக அதனைக் கண்டிக்குமாறு “நெருக்குதலுக்கு” இலக்காகியுள்ளனர் என அவர் மேலும் கூறினார்.
“நாங்கள் சுடப்பட வேண்டும் என விரும்பியிருந்தால் எகிப்தில் புரட்சியின் போது மலேசிய மாணவர்களை மீட்கச் சென்ற போது அது நிகழ்ந்திருக்க வேண்டும்.”
சோமாலியாவில் நாங்கள் எங்களுடைய பணித் திறன் குறியீடுகளை அடைந்து விட்டோம். ஆனால் கடைசி நாள் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் தங்கள் துப்பாக்கிகளுடன் எங்களை ஏமாற்றி விட்டனர்,” என்றார் அஜிஸ்.