பெர்சே 3.0 பேரணி நடத்தப்படும்!

அடுத்த பேரணி கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என பெர்சே 2.0 குழு அறிவித்துள்ளது.

பெர்சே 3.0  என அழைக்கப்படும் அந்தப் பேரணியின் கருப்பொருள் Duduk Bantah (குந்தியிருப்பு ஆட்சேபம்) என்பதாகும். அந்த விவரங்களை பெர்சே 2.0 அமைப்பின் இணைத் தலைவர் ஏ சாமாட் சைட் இன்று அறிவித்தார்.

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கு நெருக்குதல் கொடுக்கப்படும் வகையில் நாடு முழுவதும் பல இடங்களிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் அது போன்ற எதிர்ப்புக் கூட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சே 3.0  கவனம் செலுத்தும் மூன்று முக்கியக் கோரிக்கைகளை அம்பிகா ஸ்ரீனிவாசன் வெளியிட்டார்:

* இசி (தேர்தல் ஆணையம்) பதவி துறக்க வேண்டும்

* அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் நடைமுறைகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

* தேர்தல்களைக் கண்காணிக்க அனைத்துலகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஹிம்புனான் ஹிஜாவ் அமைப்பும் தனது 3.0 பேரணியை பெர்சே 3.0 பேரணியுடன் இணைந்து நடத்தும் என்றும் அம்பிகா அறிவித்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான  நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஐந்து முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணத் தவறி விட்டதாக பெர்சே நேற்று அறிவித்தது.

அந்த ஐந்து பிரச்னைகள் வருமாறு:

* வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு.

* தீவகற்ப மலேசியாவில் வாக்குகளுக்காக குடியுரிமை மோசடி.

* 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்தை அமலாக்குவதும் தேர்தல் குற்றங்கள் பற்றிய  விளக்கங்களை விரிவுபடுத்துவது.

* ‘கறை படிந்த’ அரசியலை நிறுத்துவதற்கான திட்டம்.

* அனைத்துலகப் பார்வையாளர்களை அழைப்பது.

பிஎஸ்சி நடைமுறைகள் வழி தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட விட்டால் இன்னொரு பேரணியை நடத்தப் போவதாக பல அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியான பெர்சே 2.0 ஏற்கனவே எச்சரித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்களை நாடி பெர்சே 2.0 கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி பெரிய அளவில் பேரணியை நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து எழுந்த அழுத்தம் காரணமாக நஜிப் நிர்வாகம் பிஎஸ்சி-யை அமைத்தது. தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்துவதற்கான யோசனைகளை வழங்கும் பொறுப்பு அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

2007ம் ஆண்டு முதலாவது பெர்சே பேரணி நடத்தப்பட்டது. அப்போது அகோங்கிடம் மகஜர் கொடுப்பதற்காக கிட்டத்தட்ட 40,000 பேர் இஸ்தானா நெகாரா நுழைவாயில் வரை நடந்து சென்றனர்.

TAGS: