ஒரு வாக்காளர் எப்படி ‘படியாக்கம்’ செய்யப்பட முடியும் என்பதை பெர்சே காட்டுகிறது

பெர்சே 3.0 பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர் அதற்கான செயற்குழு உறுப்பினரும் அரசியல் ஆய்வாளாருமான வோங் சின் ஹுவாட், வாக்காளர்கள் ‘படியாக்கம்’ செய்யப்பட்ட பல சம்பவங்களை விவரித்தார்.

2011ம் ஆண்டு நான்காவது கால் பகுதிக்கான வாக்காளர் பட்டியலை பயன்படுத்திய அவர், ஒரு வாக்காளர் பல முறை வாக்களிக்க இயலும் வகையில் பல முறை அவர் எப்படிப் பதிவு செய்யப்பட முடியும் என்பதை வோங் விளக்கினார்.

“நாம் படியாக்கத் தொழில் நுட்பத்தில் பெரிய சாதனை படைத்துள்ளோம். நாம் கொரியர்களையும் உலகில் உள்ள மற்ற நாடுகளையும் கூட தோற்கடித்து விடலாம்,” என அந்த மொனாஷ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கிண்டலாகக் கூறினார்.

அந்த நான்கு வழிகள் வருமாறு:

– ஒரே பழைய அடையாளக் கார்டு எண்ணையும் முகவரியையும் கொண்டுள்ள ஆனால் மாறுபட்ட புதிய அடையாளக் கார்டு எண்ணைக் கொண்ட வாக்காளர்கள்.

– ஒரே பெயரைக் கொண்ட ஆனால் புதிய அடையாளக் கார்டு எண் சிறிதளவு மாறுபட்டுள்ள வாக்காளர்கள்.

– ஒரே பெயர் ஆனால் சிறிதளவு மாறுபட்ட பிறந்த தேதியும் புதிய அடையாளக் கார்டு எண்ணும் கொண்ட வாக்காளர்கள்.

–  ஒரே பெயரைக் கொண்ட ஆனல் அடையாளக் கார்டு எண் சிறிதளவு வேறுபட்ட அஞ்சல் வாக்காளர்கள்.

அவ்வாறு படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு 10 சான்றுகளை வோங் வழங்கினார். முதலாவது வழியில் ‘படியாக்கம்’ செய்யப்பட்ட குறைந்தது 560 சம்பவங்கள் இருப்பதாக அவர் சொன்னார்.

ஆனால் மற்ற மூன்று வழிகளில் ‘படியாக்கம்’ செய்யப்பட்டவர் எண்ணிக்கை தமக்குத் தெரியாது என்று குறிப்பிட்டு “அது பெரிய மலையின் உச்சியாகவும் இருக்கலாம்” என்றார்.