பத்து பகாட் ஜாலான் இப்ராஹிமுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை வருகை அளித்தார். அவரது வருகை அந்த வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
காலை மணி 9.15 வாக்கில் அங்கு சென்றடைந்த நஜிப், Chop Tong Ah கோப்பிக் கடையில் “kopi o”, nasi lemak, roti bakar ஆகியவற்றைக் கொண்ட காலை உணவை உட்கொண்டார்.
அவருடன் மசீச தலைவர் சுவா சொய் லெக், ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான், பத்து பகாட் எம்பி டாக்டர் புவாட் ஸாக்கார்ஷி, பாரிட் சுலோங் எம்பி நோராய்னி அகமட், உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சாப்ரி யாக்கோப் ஆகியோரும் சென்றிருந்தனர்.
சந்தையில் நடந்து சென்ற நஜிப்புடன் கை குலுக்குவதற்கு மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்றனர் என்று தான் கூற வேண்டும்.
பலர் பிரதமருடன் தங்கள் கைத் தொலைபேசியில் படமும் எடுத்துக் கொண்டனர்.
அவ்வாறு செய்ய முடியாதவர்கள் பிரதமர் பயன்படுத்திய காருக்கு பக்கத்தில் நின்று கொண்டு படம் எடுத்துக் கொண்டனர்.
காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் நஜிப்பும் அவரது குழுவினரும் சந்தைக் கூடத்தில் நடந்து சென்று பொது மக்களையும் வணிகர்களையும் சந்தித்து உரையாடினர்.
நஜிப் அந்தப் பகுதியில் உள்ள பல கடைகளுக்கும் வருகை அளித்தார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அங்கு இருந்த பின்னர் நஜிப், பத்து பகாட் அரங்கத்தில் தேசிய நிலையிலான ‘Jelajah Janji Ditepat’
என்னும் நிகழ்வைத் தொடக்கி வைக்க வைக்கப் புறப்பட்டுச் சென்றார்.
பெர்னாமா