நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும் தேர்தல் சீர்திருத்தங்களை அமலாக்குவதற்கு முன்னர் தேர்தல்களை நடத்தக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு உப்கோ எனப்படும் பாசோக்மொமோகுன் கடாஸான் முருட் அமைப்பின் தலைவர் பெர்னார்ட் டொம்போக் அளித்துள்ள ஆதரவை பக்காத்தான் ராக்யாட் வரவேற்றுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தல் நிகழ்வதற்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பணியை முடிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என டொம்போக் கூறியதாக இன்று நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
“இல்லை என்றால் குழு பணியை நிறைவு செய்வதற்கு முன்பு தேர்தல் நடத்தப்பட்டால் அந்தக் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கமே பாழாகி விடும்”, என அவர், உப்கோவின் மூவாண்டு பொதுக் கூட்டத்தை சபா துவாரானில் தொடக்கி வைத்த பின்னர் கூறியதாக அந்த ஏடு குறிப்பிட்டது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் குழுவும் கலைக்கப்படும் என்பதை தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சருமான டொம்போக் சுட்டிக் காட்டினார்.
“பலவீனங்கள் கற்பனையாக இருந்தாலும் உண்மையாக இருந்தாலும் முதலில் வாக்காளர் பட்டியலை சுத்தம் செய்ய வேண்டும்.”
கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும்
அவ்வாறு செய்வதின் மூலம் மக்கள் புகார் செய்வதற்குக் காரணம் இருக்காது. தவறை ஒப்புக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். சரியாக செய்ததற்கு பெருமையும் கொள்ள வேண்டும். அதனால் கேள்வி எழுப்ப முடியாத அளவுக்கு வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும்,” என்றார் டொம்போக்.
டொம்போக் விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வரவேற்றுள்ளார்.
தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை நாடும் மக்களுடைய நாடித் துடிப்பை அமைச்சர் உணர்ர்ந்துள்ளதை அது காட்டுகிறது என்றார் அவர்.
என்றாலும் மெர்தேகா மையம் நடத்திய கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது போல பெர்சே 2.0 விடுத்துள்ள எட்டுக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புவதாக லெம்பா பந்தாய் உறுப்பினருமான அவர் மலேசியாகினியிடம் இன்று கூறினார்.
“நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் பணிகளில் அந்த எட்டுக் கோரிக்கைகளும் இடம் பெறுவது அவசியமாகும்.”
உண்மையான தேர்தல் சீர்திருத்தங்களுக்கு இன்னும் அதிகமான அமைச்சர்களும் பிஎன் தலைவர்களும் வேண்டுகோள் விடுப்பர் எனத் தாம் நம்புவதாக பாஸ் உதவித் தலைவர் சாலேஹுடின் அயூப் கூறினார்.
பக்காத்தான் எழுப்பிய விஷயங்கள் பிஎன் உறுப்புக் கட்சிகள் உட்பட எல்லாக் கட்சிகளையும் விழித்துக் கொள்ளச் செய்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது சொன்னார்.
என்றாலும் தேர்வுக் குழு மீது தனது நிலையை முடிவு செய்வதற்கு முன்னர் பிரதமருடைய வாக்குறுதிக்காக எதிர்த்தரப்புக் கூட்டணி காத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த பொக்கோக் செனா எம்பி குறிப்பிட்டார்.
அக்டோபர் மாதம் 3ம் தேதி கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படும்.