பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு ஓட்டுநரை மாற்றத்தான் வேண்டும், சேவியர்

மலேசிய பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அரசாங்க ஊடகங்களின் உதவியுடன், அரசாங்க மானியத்தைப் பயன்படுத்தி சுயமதிப்பையும் தனது  கட்சியையும் பிரபல படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வருகிறாரேயன்றி அதனால் நாட்டுக்குப் பெரிய நன்மைகளைக்  கொண்டுவரவில்லை என்று கூறினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார்.

விபத்துகளுக்குக் காரணம்  ஓட்டுனரை மாற் றாத ஒரே ஆட்சி முறை               

பிரதமரின் ஓட்டுனரை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கை தொழில்முறை விதிகளுக்கும் கோட்பாடுகளுக்கும்கூட புறம்பான ஒரு பிற்போக்குவாதமாகும் என்று கூறும் சேவியர், உதாரணமாக 2020 லட்சியத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் பிரதமர் மகாதீர் 2020 வரை தனக்கு அவகாசம் வேண்டும் என்பதால் இடையில் ஓட்டுனரை மாற்ற அனுமதிக்காமலிருந்தால், இன்று இவர் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தே இருக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு பாதிவழியில் ஓட்டுனரை மாற்றுவதுதான் தொழில்முறை வழக்கம். அதனை எல்லாத் தொழில் முறை அமைப்புகளும், ஆகாய விமானம் முதல் சாலையில் ஓடும் பஸ், லாரி நிறுவனங்கள் கூட  மேற்கொண்டு வருவதை  அறியாதவர்போல் அறிக்கை விட்டுள்ளார் நமது பிரதமர்”, என்றாரவர்.

ஒருவர் ஓய்வின்றி நீண்ட நேரம் ஒரு பணியைச் செய்யும் பொழுது, கவனம் இழந்து பல விபத்துகளில் சிக்குவதைத் தடுக்கவும் அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் ஏற்படும் இழப்பைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்பதனை மறைத்து  உரையாற்றியுள்ளார் நஜிப் என்று சேவியர் மேலும் கூறினார். 

நாட்டு அரசியலில்  அம்னோவும், பாரிசானும் நீண்டக்கலமாக ஆதிக்கம் செலுத்தி வருவதால் மலேசிய மக்கள் நிறைய விபத்துகளையும், இழப்பீடுகளையும் சந்தித்துள்ளதை அரசாங்கத் தகவல் சாதனங்களின் துணையுடன் இருட்டடிப்பு செய்து வருகிறார் நஜிப்.

இந்நாட்டில் நடந்த மே 13 கலவரம் தொடங்கி, கெடா மமாளி சம்பவம், தாமான் மேடன் கலவரம், பெர்சே பேரணி, இண்ட்ராப்பேரணி, வாக்காளர் பதிவிலுள்ள குழறுபாடிகள், சபா தேர்தல் முறைகேடு, அன்னிய குடியேறிகள் வாக்களிப்பு, இந்நாட்டில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை, அடையாள அட்டை, பிறப்பு பதிவு பத்திரம் போன்றவை வழங்க மறுத்தல், உயர் கல்விக்கூடங்களில், வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் காட்டப்படும் எண்ணற்ற பாகுபாடுகளுக்கும் குழறுப்பாடுகளுக்கும், இன ஒதுக்கல் போன்ற அரசியல் விபத்துகளுக்கும் காரணம் அம்னோவை மையமாகக் கொண்ட ஒரே கட்சி ஆட்சி முறையாகும் என்று மேலும் விளக்கம் அளித்தார்.

புள்ளிவிபர பித்தலாட்டம்

பெர்வாஜா எஃகு, மாமிங்கோ, லண்டன் நாணயமாற்று சந்தை, பூமி புத்ரா நிதி நிறுவனம், மசீச கூட்டுறவுகழகம், மைக்கா ஹோல்டிங்ஸ், பெல்டா, என்.எப்.சி கால்நடை தீவனம், கோலக்கிள்ளான் மேற்கு துறைமுகம் நில வாங்கல், சிலாங்கூர் குடிநீர் விநியோக ஒப்பந்தம், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை தனியார்மய ஊழல் போன்ற எண்ணிக்கையில் அடங்காத நிதி முறைகேடுகளினினாலும் இந்நாட்டை இன்று திவாலாகும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளதற்கான காரணம் ஓட்டுநரை மாற்றாத ஒரே கட்சி ஆட்சிமுறை என்பதனை மறந்து பிரதமர் சாதனைகள் பற்றிப் பேசுவது வேடிக்கையாகவுள்ளது என்று சேவியர் இடித்துரைத்தார்.

பிரதமர்  இதற்கு முன் நாட்டின் உருமாற்றும் இலக்கு என்று மேடைகளில்  அறிவித்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் எல்லாம் காற்றோடு போய் விட்டது. அவரின் மூன்றாண்டு சாதனையைக் கடந்த ஆண்டு இறுதியில் அவர் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்ட புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புலப்படும். அரசாங்கம் அவ்வப்போது செய்வதும் சொல்வதும் ஒரு  பலவீனமான அரசியல்வாதி மக்களைச் சமாதானப்படுத்தக் கூறும் ஆறுதல் வார்த்தைகளாகத்தான் இருக்கிறதே தவிர, உண்மையில் அதனை நிறைவேற்ற அரசிடம் ஆக்கரமான திட்டமோ, கடப்பாடோ இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

அரசு சீனி, மாவு போன்ற உணவு பொருள்களுக்கு வழங்கிய சிறு உதவித் தொகைகளை மீட்டுக்கொண்டபோதும், நாட்டின் உயர்கல்வி கூடங்களில் கல்விக்கற்கும் வாய்ப்புகள் பல சிறந்த மாணவர்களுக்கு நிராகரிக்கப்பட்டபோதும், மக்களின் கண்களில் மண்ணைத் தூவும் அறிக்கைகளுக்கும் சுலோகங்களுக்கும் பஞ்சமேயில்லை. ஆனால் இவ்வாண்டு பட்ஜெட்டில் சம்பந்தப்பட்ட துறைகளின் மேம்பாட்டுக்கும்,  மேம்பாடு திட்டங்களின் அமலாக்கத்திற்கும் அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதியைக் கவனித்தால் அரசு நோக்கத்தில் உள்ள போலித்தனம் புலப்படும்.

ஓர் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழ்நிலையில்  எவரும் நாடு திவால் ஆவதைப்பற்றி பேசமாட்டார்கள். ஆனால் இன்று நாடு திவால் ஆவதை தடுக்கத் தாங்கள் பாடுபடுவதாக பாரிசான் தலைவர்கள் அடிக்கடிக் கூறிவருவதே நாட்டின் பொருளாதாரப் பலவீனத்திற்குத் தக்க சான்றாகும் என்பதை சேவியர் வலியுறுத்தினார்.

“ஆக, கூடிய விரைவில் கண்டிப்பாக நாடு எதிர்நோக்கவிருக்கும் மாபெரும் பொருளாதார இடர்பாட்டிலிருந்து  மக்களைக் காப்பாற்றவும் இந்நாட்டை பெரும் கடனிலிருந்து மீட்கவும் ஓட்டுனரை மாற்றுவது தவிற்க முடியாத செயலாகும்.”

மத்திய அரசின் கடன் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2004ம் ஆண்டில் 24,200 கோடியாக இருந்தது இப்பொழுது 45,600 கோடியாக  உயர்வுகண்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில்  அக்கடன் 88.4  விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கடன்கள்  சுமார் 25.6 விழுக்காடு அதாவது 10,000 கோடிகள் அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் கிள்ளான் பள்ளத்தாக்கு இலகு ரயில்  திட்டம், அரசு ஊழியர் சம்பளம் மற்றும் ஒய்வூதியத்திற்கு மேலும் 6,000 கோடிகள்  தேவை படுகின்றது என்பதால் 2012ம் ஆண்டில் இந்தக் கடன் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயமுண்டு என்று சேவியர் மேலும் கூறினார்.

இவ்வாண்டு  நாட்டின்  கடனைக் கட்டவே 20,500 கோடிகள் தேவை படுகிறது. ஆனால் பிரதமர் பட்ஜெட்டில் வளர்ச்சி மற்றும் உற்பத்தி பற்றி கூறியுள்ள கூற்றுக்கு ஏற்ப நமது ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் அமையவில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டில் 13.2 விழுக்காடாக இருந்த ஏற்றுமதி 2011ம் ஆண்டில் 2.7 விழுக்காடாக  சரிந்துள்ளது. மின்சார மற்றும் மின்னியல் பொருள்களின்  ஏற்றுமதி நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 26.4 விழுக்காட்டிலிருந்து 4.9 விழுக்காடாக சரிந்துள்ளது.

ஆக, மக்களின் வாழ்க்கை செலவீனங்கள் கூடி நாடு எப்பேற்பட்ட பொருளாதாரச் சிக்கலை நோக்கினாலும், அம்னோ தலைவர்களும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் கவலையற்ற சீமான்களாகத்தான் வாழ்வார்கள். அதற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கத்தான்  ஓட்டுனரை மாற்றவேண்டாம் என்கிறார் பிரதமர்.

கிரீஸ் வழியா?

அதே வேளையில் 2008ம் ஆண்டு  மக்கள் செய்த  சிறு மாற்றத்தினால், மக்கள் கரங்கள் வலுப்பெற்றுள்ளதால்  நடுங்கிப்போயுள்ள நஜீப்பின் அரசு மக்களுக்குச் சிறு சலுகைகளைக் காட்டி  அடுத்துவரும் தேர்தலில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ளப்  போலியான புள்ளி விவரங்களைக் கொடுத்துக் கவர்ச்சி அரசியல் நடத்துகிறது என்றாரவர்.

தவறான ஆட்சியால், பொருளாதாரக் கொள்கைகளால், வீம்பான திட்டங்களால் நாடு கிரீஸ், ஸ்பெயின், மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளைப்போன்று அவல நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைத் தடுக்க முடியாது. இப்பொழுது  அவசரச் சிகிச்சையளிக்கத் தவறினால் ஆசியான் வட்டாரத்தின் ஒரு கடும் நோயாளி நாடாக மலேசியா உருவெடுக்கும் என்பது திண்ணம் என்று பாரிசான் மத்திய அரசுக்கு பக்காத்தான் எடுத்துக் கூறியுள்ளது.

ஆனால், தொடர்ந்து மக்கள் நலனை புறக்கணித்துவரும் பாரிசான் அரசை மக்கள் புறக்கணித்து நாட்டுக்கு விமோசனம் பெற்றுதருவது நம் அனைவரின் கடமையாகும்  என்று வலியுறுத்திக் கூறினார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

TAGS: