சாமிவேலு: கடந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் என்னை தோல்வி காணச் செய்தார்

கடந்த பொதுத் தேர்தலில் தாம் எதிர்பாராத வகையில் தோல்வி கண்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காரணம் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார்.

அந்த முன்னாள்  பிரதமர் தேர்தலில் தமக்கு எதிராக வேலை செய்தார் என அவர் குற்றம் சாட்டினார். இன்று நியூ சண்டே டைம்ஸில் வெளியான பேட்டி ஒன்றில் சாமிவேலு அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாம் போட்டியிட்ட சுங்கை சிப்புட் தொகுதியில் செல்லாத வாக்குகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததற்கு மகாதீருடைய வேலையே காரணம் என அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

“அந்த 1001 செல்லாத வாக்குகள் எங்கிருந்து வந்தன? மலாய் வாக்காளர்களுக்கு மகாதீர் வழங்கிய யோசனையே காரணம். சாமிவேலுக்கு ஒட்டுப் போட வேண்டாம் என அவர் அம்னோ உறுப்பினர்களிடம் கூறினார்,” என சாமிவேலு சொன்னதாக நியூ சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் தம்மை அணுகிய வாக்காளர்கள் இவ்வாறு சொன்னதாக சாமிவேலு குறிப்பிட்டார்: “நாங்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது தெரியுமா? உங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என மகாதீர் எங்களிடம் கூறினார்.”

ஐபிஎப் என்ற இந்தியர் முன்னேற்றக் கட்சி பாரிசான் நேசனலில் நுழைவதை மற்ற எல்லா உறுப்புக் கட்சிகளும் ஆதரித்த போதிலும் தாம் எதிர்த்ததால் தமக்கு எதிராக மகாதீர் உட்பகையைக் கொண்டிருந்ததால் அவ்வாறு செய்யப்பட்டதாக சாமிவேலு சொன்னார்.

அது தம்மைக் காயப்படுத்தினாலும் அந்த முன்னாள் பிரதமருடன் 22 ஆண்டு காலம் தாம் வேலை செய்த காலம் தமக்கு “மிகுந்த அனுபவத்தை” தந்ததால் தாம் இன்னும் மகாதீரை மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“மஇகா எந்திரம் வேலை செய்யவில்லை”

மஇகா-வின் இன்றைய நிலை பற்றியும் சாமிவேலு-விடம் அந்தப் பேட்டியின் போது வினவப்பட்டது. தாம் நல்ல கரங்களிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறியதாக அவர் சொன்னார்.

“நான் கட்சியை விட்டு விலகி விட்டேன். நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் கட்சி கடந்த காலத்தில் இருந்த அதே வலுவுடன் நிர்மாணிக்கப்படும் என நான் நம்புகிறேன்,” என அவர் அந்த ஆங்கில் மொழி நாளேட்டிடம் கூறினார்.

தேர்தல் முன் கூட்டியே நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும்  மஇகா எந்திரம் இன்னும் ஒன்றுதிரட்டப்படவில்லை என சாமிவேலு சொன்னார்.

“அது தலைவர்கள் அங்கும் இங்கும் செல்வது பற்றியதல்ல. ஒவ்வொரு இடத்திலும் உள்ளூர் எந்திரம் வேலை செய்ய வேண்டும். அதே போன்று இந்தியர் வாக்கு எந்திரமும் வேலை செய்ய வேண்டும்,”  என வலியுறுத்திய அவர், இல்லாவிட்டால் மஇகா “அங்கும் இங்கும் சில வாக்குகளை இழக்க நேரிடும்” என எச்சரித்தார்.

2008 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்விகளுக்கு அப்போதைய அரசாங்கம் இந்தியர் வாக்குகளுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளத் தவறி விட்டதே காரணம் என சாமிவேலு சொன்னார்.

அந்தப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தின் “சிந்தனையில் மாற்றத்தை” கொண்டு வந்து இந்திய சமூகத்துக்கு உதவ வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார் என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.

என்றாலும் இந்திய சமூகத்துக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தருவதில் ஹிண்ட்ராப் பங்காற்றியதாக கூறப்பட்டுவதை அவர் நிராகரித்தார்.

“இல்லை, இல்லை, இல்லை, இல்லை. அதற்கு ஹிண்ட்ராப் பொறுப்பு என்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அதனை ஏன் செய்யவில்லை?” என அவர் வினவியதாக அந்த ஏடு குறிப்பிட்டது.

இந்திய சமூகம் ஒரங்கட்டப்படுவதை ஆட்சேபித்து 2007ம் ஆண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஹிண்ட்ராப் தலைமையில் கோலாலம்பூர் சாலைகளில் ஆர்ப்பட்டம் செய்தனர்.

TAGS: