பிரதமர் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பள்ளிவாசல் குழுக்களுக்கு உத்தரவு

கடந்த சனிக்கிழமையன்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஜோகூர் பயணத்தின் ஒரு பகுதியாக பத்து பகாட்டிற்குச் சென்றிருந்த போது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு ஐந்து பேராளர்களை அனுப்புமாறு பத்து பகாட் மாவட்டத்தைச் சேர்ந்த 180 பள்ளிவாசல் குழுக்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

மாவட்ட காதி அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஏப்ரல் 2ம் தேதியிடப்பட்ட அதிகாரத்துவக் கடிதத்தின் வழி அந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் பேராளர்களுக்கு 50 ரிங்கிட் அலவன்ஸ் கொடுக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிவாசல் நிதிகளை கட்சி அரசியலுக்குத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக கருதும் சில தனி நபர்கள் அந்த உத்தரவின் பிரதிகளை வலைப்பதிவுகளிலும் முகநூலிலும் வெளியிட்டுள்ளனர்.

நஜிப் தமது அரை நாள் பயணத்தின் போது காலை மணி 9.15க்கு பத்து பகாட் சென்றடைந்தார். அங்கு பொது மக்களுடன் நடந்து சென்றதுடன் உள்ளூர் கோப்பிக் கடை ஒன்றில் காலை உணவும் உட்கொண்டார்.

அவர் பின்னர் பத்து பகாட் சந்தைக் கூடத்துக்குச் சென்றதுடன் அங்குள்ள வணிகர்களுடனும் பொது மக்களுடனும் 45 நிமிடங்களுக்கு மேல் அளாவளாவினார்.

பின்னர் பத்து பகாட் அரங்கில் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வில் 50,000 பேர் முன்னிலையில் உரையாற்றினார்.

பத்து பகாட் காதி உத்தரவு பின்பற்றப்பட்டிருந்தால் பள்ளிவாசல்கள் ஆயிரம் பேருக்கும் மேல் அனுப்பியிருக்க வேண்டும்.

நஜிப்-புடன் ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், உள்நாட்டு வாணிக கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப், கல்வித் துணை அமைச்சரும் பத்து பகாட் எம்பி-யுமான புவாட் ஸாக்காராஷியும் சென்றிருந்தனர்.

அந்த உத்தரவை காதி நியாயப்படுத்துகிறார்

இதனிடையே அந்தக் கடிதத்தை வெளியிட்டதை மாவட்ட காதி பாஹ்ரென் ஜலால் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது ஒப்புக் கொண்டுள்ளார்.

என்றாலும் “நமது தலைவர்களுக்கு ஆதரவைக் காட்டுவதும்” இமாம், பராமரிப்பாளர்கள் உட்பட மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பேராளர்களுக்கு ‘வெளிச்சத்தை’ காட்டுவதும் அந்தக் கடிதத்தின் நோக்கங்கள் என்றார் அவர்.

“நமது தலைவர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அடையாளமாக அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டோம். நமது பிரதமர் பத்து பகாட்டுக்கு வருவது இதுவே முதன் முறை. அதனால் அவரது செய்தியைச் செவிமடுக்க செல்லுமாறு நாங்கள் அவர்களுக்கு உத்தரவிட்டோம்,” என்றார் பாஹ்ரென்.

அந்த 50 ரிங்கிட் “பெட்ரோல் அலவன்ஸ்” ஜோகூர் இஸ்லாமிய விவகார மன்றம் வழங்கிய பள்ளிவாசல் மேம்பாட்டு ஒதுக்கீட்டிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

ஆனால் நஜிப் நிகழ்வுக்குச் சென்ற தங்கள் பேராளர்களுக்கு பள்ளிவாசல்கள் மொத்தம் 45,000 ரிங்கிட்டைச் செலவிடவில்லை என்றும் பாஹ்ரென் குறிப்பிட்டார்.

“ஒவ்வொருவருக்கும் 50 ரிங்கிட் கிடைக்கவில்லை- அது ஒரு காருக்கு 50 ரிங்கிட் ஆகும். ஆகவே ஒரு நபருக்கு 10 ரிங்கிட்- அது பெட்ரோலுக்கு மட்டுமே. அவ்வளவு தான்.”

பள்ளிவாசல்கள் மேற்கொள்ளும் திட்டத்திற்கு செலவு செய்யப்படுவதாக அது கருதப்படுவதால் அரசாங்க ஒதுக்கீட்டிலிருந்து அந்தப் பணத்தைப் பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் பத்து பகாட் மாவட்ட காதி குறிப்பிட்டார்.