அமைச்சு இலக்கு: 2015ம் ஆண்டுக்குள் 150,000 அந்நிய மாணவர்களைச் சேர்க்க எண்ணம்

2015ம் ஆண்டுக்குள் இந்த நாட்டுக்கு மேற்கல்வியைத் தொடர 150,000 அந்நிய மாணவர்களைக் கவருவதற்கு உயர் கல்வி அமைச்சு இலக்கு வைத்துள்ளது.

அவ்வாறு தெரிவித்த உயர் கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் நூர், கடந்த ஆண்டு இறுதி வரையில் இந்த நாட்டில் 96,000 அந்நிய மாணவர்கள் மலேசியாவில் மேற்கல்வியைத் தொடர்ந்ததாக கூறினார்.

உயர் கல்விக்கு சிறந்த தேர்வாக மலேசியாவை விளம்பரப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

நியாயமான கட்டணங்களுடன் உயர்ந்த தரத்தைக் கொண்ட உயர் கல்வியை வழங்கும் கல்வி மய்யமாக மலேசியா புகழ் பெற்று வருகிறது என்றும் தெரிவித்தார். அந்நிய மாணவர்களுக்குத் தங்கள் நாடுகளில் விதிக்கப்படுகின்ற கட்டணங்களைக் காட்டிலும் மிகக் குறைவாக இங்கு விதிக்கப்படுவதாக உயர் கல்வி அமைச்சின் குடும்ப தினக் கொண்டாட்டங்களை செர்டாங்கில் தொடக்கி வைத்த பின்னர் அப்துல் ரஹிம் நிருபர்களிடம் பேசினார்.

கல்வி மேம்பாட்டு மய்யங்களை டுபாய், ஜக்கார்த்தா, ஹோ சி மின் சிட்டி, பெய்ஜிங் ஆகியவற்றில் அமைச்சி அமைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

பெர்னாமா