கூடுதல் வேகத்தில் செல்லுமாறு பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரத்துக்கு ஆலோசனை

அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்வதற்காக பிஎன் தேர்தல் நடவடிக்கை எந்திரம் இன்னும் கூடுதல் வேகத்தில் செல்ல வேண்டும் என பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறியிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதற்கான தங்களது வேகத்தை பிஎன் தேர்தல் ஊழியர்கள் அதிகரித்துக் கொள்வதற்கு அந்த யோசனை உதவும் என அவர் சொன்னார். அதே வேளையில் உறுப்புக் கட்சிகளும் உறுப்பினர்களும் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாக இயங்க முடியும் என்றார் அவர்.

“இப்போது ஐந்தாவது கியரில் செல்வதற்கு நேரம் வந்து விட்டது. பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பது நமக்குத் தெரியாது என்றாலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட வேகத்தை நாம் தொடர வேண்டும்.”

“எந்த நேரத்துக்கும் தயாராக இருங்கள்,” என அவர் பட்டர்வொர்த் கம்போங் மானிஸில் பிராய் சட்டமன்றத் தொகுதிக்கான பிஎன் இளைஞர் தேர்தல் நடவடிக்கை எந்திரத்தை தொடக்கி வைத்த பின்னர் அகமட் மஸ்லான் நிருபர்களிடம் பேசினார்.

அனைத்து பிஎன் உறுப்புக் கட்சிகளும் தொகுதி, கிளை, வாக்குச் சாவடிகள்  நிலையில் தேர்தல் நடவடிக்கை எந்திரத்தை முடுக்கி விட வேண்டும் என்றும் அம்னோ தகவல் பிரிவுத் தலைவருமான அவர் சொன்னார்.

“தேர்தல் எந்திரங்கள் முடுக்கி விடப்பட்டதும் நடவடிக்கைகள் அறைகள் திறக்கப்படலாம். அடுத்து நிகழ்வுகளுக்குத் திட்டமிட்டு அவற்றை அமலாக்கலாம்.”.

கட்சிக் கொடிகள் எந்த இடையூறும் செய்யாத வகையில் வீடுகளிலும் நடவடிக்கை அறைகளிலும் பறக்கவிடப்படலாம்,” என்றும் அவர் சொன்னார்.

பெர்னாமா